January 6, 2020

நட்பு ஆராய்தல்


நட்பு ஆராய்தல்

நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின்
வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு.      791

நட்புக் கொள்ள விரும்புவோர்க்கு ஒருவனோடு நட்புச் செய்த பின் அவனை விட முடியாது. ஆதலால், ஆராயாது நட்புச் செய்தலைக் காட்டிலும் கேடு தருவது வேறில்லை.  

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.           792

குணம் செயல்களின் நன்மை தீமைகளைப் பலகாலும் பல வாற்றாலும் ஆராய்ந்து கொள்ளாதவன் நட்பானது, முடிவில்தான் சாதற்கேதுவான துன்பத்தினைக் கொடுக்கும்.   

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்துயாக்க நட்பு.            793

ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினை யும் குறையாத சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து, அவனோடு நட்புக் கொள்க.   

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்து கொளல்வேண்டும் நட்பு.            794

 நற்குடியில் பிறந்து தன்னிடத்திலுள்ளதாக உலகோர் சொல்லும் பழிக்கு நாணுபவனை, அவனை விரும்பும்  பொருளைக் கொடுத்தா யினும் நட்புக் கொளல் வேண்டும்.   

அழச்சொல்லி இடித்து வழக்கு அறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.      795

முறையல்லது செய்யக் கருதினால் அழும்படி சொல்லி விலக்கி யும், செய்தால் பின்னும் செய்யாதபடி கண்டித்துரைத்தும், உலக வழக்கையும் அறிய வல்லாரை, ஆராய்ந்து நட்புக் கொள்க.

கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.       796

ஒருவனுக்கு வறுமை என்பது தன் நண்பர்களாகிய நிலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோலாகும். ஆதலால், வறுமையிலும் ஓர் நன்மையுண்டு.  

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.           797

ஒருவனுக்கு ஊதியம் என்பது, அறிவிலாரோடு கொண்ட நட்பினை நீக்கி விடுதலே. 

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு.            798

தம் ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய நினையாதிருக்க வேண்டும். அது போல, துன்பம் வந்தபோது கைவிடுவாரது நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். ஆற்று அறுத்தல்-கைவிடுதல்   

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.       799

ஒருவன் கெடுங் காலத்து அவனை விட்டு நீங்குவாரது நட்பு. பிறர் தன்னைக் கொல்லும் போது நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை அந்நட்பு, தன்னைக் கொல்லுகிறவனைக் காட்டிலும் மிகுதியாக வருத்தும்.  

மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றுஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.          800

குற்றமற்றவரது நட்பைக் கொள்க; தனக்கு நிகரில்லாத வருடைய நட்பை அவர் விரும்பிய ஒரு பொருளைக் கொடுத்தாயினும் நீக்கி விடுக.  

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...