இன்சொல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91
அன்பு கலந்து, வஞ்சனை இல்லாது, அறத்தினை யுணர்ந்தவர் வாயிலிருந்து வரும் சொல்லே இன்சொல்லாகும்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். 92
முகம் இனியனாய் இன்சொல்லும் சொல்வானானால், மனம் உவந்து ஒருவர்க்கு ஒன்றைக் கொடுப்பதை விட நல்லது.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். 93
ஒருவரைக் கண்டபொழுதே, முகமலர்ந்து இனிமையாகப் பார்த்து, மனத்தொடு பொருந்திய இனிய சொற்களைச் சொல்வதே அறமாகும். இன்சொல்லே ஒருவர்க்குச் செய்யும் முதலறமாகும்.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு. 94
எவரிடத்தும் இன்பந்தரும் இன்சொல்லைச் சொல்லுபவருக்கு, துன்பத்தைத் தரும் வறுமை இல்லையாகும்.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற. 95
தாழ்மையுடையவனாய்,
இன்சொல் சொல்லுவதே ஒருவனுக்கு அழகாகும். மணி, பொன்னணியயல்லாம் அழகல்ல. இன் சொல்லே ஒருவனுக்குச் சிறந்த அழகாகும்.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். 96
நன்மையை ஆராய்ந்து இன்சொல் சொல்லின், தீமை கெட அறம் வளரும்.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். 97
கேட்போருக்குப் பொருட்பயனைத் தந்து இனிய குணத்தி னின்றும் நீங்காத சொல், இன்பத்தைத் தந்து நன்மையையும் கொடுக்கும். இன்சொல், எல்லா நன்மைகளையும் தரும்.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும். 98
புன்மையின்றும் நீங்கிய இன்சொற்கள், இப்போதும் பின்பும் இன்பந்தரும்.
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. 99
பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பந்தருதலை அறிபவன், கடுஞ்சொல் சொல்வது என் கருதியோ?
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. 100
இன்சொற்கள் தன்னிடத்தே இருக்க, அவற்றைக் கூறாமல் ஒருவன் கடுஞ்சொற்களைக் கூறுதல், சுவையுள்ள பழங்கள் இருக்க அவற்றை விட்டுச் சுவையில்லாத காய்களைத் தின்ன விரும்புவதை ஒக்கும்.
No comments:
Post a Comment