January 6, 2020

தீவினை அச்சம்


தீவினை அச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.   201

தீச்செயல் என்னும் களிப்பை, தீச்செயலுடையார் அஞ்சார், சீரியர் அஞ்சுவர்.

தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும். 202

தீச்செயல்கள் தீமை தருவதனால், அத்தீச் செயல்களைத் தீயை விட மிகுதியாக அஞ்ச வேண்டும். 

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.       203

தம்மை வருத்துவோர்க்கும் தீயவை செய்யாமல் விடுவதை, தமக்கு நன்மையை நாடும் அறிவுகள் யாவற்றினும் முதன்மையான அறிவு என்று சொல்வர் பெரியோர்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.           204

மறந்தும் பிறனுக்குத் தீமை செய்ய எண்ணாதிருக்கக் கடவன். எண்ணினால், அவ்வாறு எண்ணினவனுக்குத் தீமை செய்ய அறம் எண்ணும். 

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.       205

ஒருவன் யான், ‘எளியவன்என்று எண்ணி அவ்வெளிமை தீர்தற் பொருட்டுப் பிறனுக்குத் தீமையைச் செய்யாதிருக்கக் கடவன். செய்தால் மீட்டும் எளியவனாவான்.

தீப்பால தாம்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.         206

துன்பங்கள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தான் பிறருக்குத் தீமை செய்யாதிருக்கக் கடவன்.

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.     207

எவ்வளவு பெரிய பகை உற்றாரும் தப்புவர். ஆனால், தீ வினை யாகிய பகை நீங்காது பின் தொடர்ந்து கெடுக்கும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.       208

பிறர்க்குத் தீயவை செய்தவர் கெடுதல், ஒருவனது நிழல் அவன் எவ்வளவு தொலைவு செல்லினும் விடாது வந்து அவன் அடியின் கீழ்த் தங்கிய தன்மையது.

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்
துன்னற்க தீவினைப் பால்.     209

ஒருவன் தன்னைத் தான் விரும்புவானாயின், எத்தகைய சிறிய தொன்றாயினும் தீச்செயல்களைப் பிறர்க்குச் செய்யாதிருக்கக் கடவன்.
 
அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்
தீவினை செய்யான் எனின்.   210

ஒருவனிடம் சென்று அவனுக்குத் தீச்செயல்களைச் செய்யா திருப்பானால், அவன் கேடில்லாதவன் என்பதை அறியக் கடவன்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...