January 3, 2020

தனிப்படர் மிகுதி


தனிப்படர் மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்இல் கனி. 1191

தம்மால் காதலிக்கப்படும் தலைவரால் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிரே, காம நுகர்ச்சி யயன்னும் விதையில்லாத கனியை பெற்றவராவர்.  
   
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.         1192

தம்மை விரும்பும் மகளிர்க்கு அவரை விரும்பும் கணவர் காலத்தே வந்து செய்யும் அன்பானது, தன்னையே நோக்கி வாழ்வார்க்கு வானம் பருவ காலத்தே மழை பெய்தாற் போலும்.    

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.  1193

தாம் விரும்பும் கணவரால் விரும்பப்படும் மகளிர்க்கு, காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து விரைவில் வருவார். வந்தால் நாம் இன்புற்று வாழ்வோம் என்னும் செருக்கு உளதாமே.    

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.    1194

உலகத்தாரால் விரும்பப்படும் மகளிரும், தாம் விரும்புந் தலைவரால் விரும்பப்படார் எனின் தீமை யுடையரே யாவர்.    

நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.           1195

நம்மால் காதலிக்கப்பட்டவர் தாமும் நம்மைக் காதலியா விடத்து நமக்கு என்ன இன்பத்தைச் செய்வார்?   

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.      1196

காமமானது ஓரிடத்தில் உண்டாயின் துன்பந்தருவதாகும். காவடியின் சுமையைப் போல இரண்டிடத்திலும் உண்டாயின் இன்பந் தருவதாகும். 
   
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.     1197

காம நுகர்தற்குரிய இருவரிடத்தும் ஒப்ப நில்லாமல் ஒருவரிடத்தே நின்று வருத்துகின்ற காமன், அவ்விடத்துத் துன்ப மிகுதியையும் பசப்பு நோயையும் அறியானோ?     
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.           1198
தம்மால் விரும்பப்படும் காதலரிடமிருந்து வரும் இனிய சொற்களைப் பெறாது பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல, கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை.    

நகைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.    1199

எம்மால் விரும்பப்பட்ட காதலர் எமக்கு அருளார் எனினும், அவரிடத்திருந்து வரும் எவ்வகைச் சொல்லும் எம் செவிக்கு இனிய வாம். அவர் வரவில்லை என்பதையாவது சொல்லிவிடக் கூடாதா என்பது கருத்து.      

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. 1200

உன்னோடு உறவில்லாதவர்க்கு உனது மிகுந்த நோயைச் சொல்லுகின்ற நெஞ்சே! நீ வாழ்வாயாக. அதைவிட்டு உனக்குத் துன்பந் தருகின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக.    

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...