January 6, 2020

விருந்தோம்பல்


விருந்தோம்பல்

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு. 81

வீட்டின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழ்வதெல்லாம், வந்த விருந்தினரைப் போற்றி அவர்க்கு உதவி செய்வதற்காகவே.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று.         82

தன் வீடு தேடி வந்த விருந்தினர் திண்ணையில் இருக்கத் தான் மட்டும் உண்ணுவது, சாவாமைக்கு உண்ணும் மருந்து எனினும் அது விரும்பத்தக்கதன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.            83

நாடோறும் வரும் விருந்தினர்களைப் போற்றுபவன் வாழ்க்கை யானது, வறுமையால் துன்புற்றுக் கெடுதல் இல்லை. பருவருதல்- துன்புறுதல்.

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.            84

முகம் இனியனாய் நன்றாக விருந்தினரைப் போற்றுபவன் வீட்டில், செய்பவள் மனமகிழ்ந்து வாழ்வாள்.

வித்து மிடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.      85

வந்த விருந்தினரை உண்பித்து மிகுந்ததைத் (மிச்சம்) தான் உண்பவனது நிலத்தில், அவன் தானே சென்று விதைக்கவும் வேண்டுமோ? வேண்டியதில்லை. பலரும் உதவுவர்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.           86

வந்த விருந்தினரை உண்பித்து, வரும் விருந்தினரை எதிர்நோக்கி இருப்பவன், வானோர்க்கும் நல்ல விருந்தினன் ஆவான்.

இணைத்துணைத்து என்பதுஒன்று இல்லை  விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.   87

விருந்தோம்பலின் பயன் இன்ன அளவினது என்று கூறும் ஓர் அளவினை உடையதன்று. அவ்விருந்தினரது தகுதியின் அளவே அதற்கு அளவாகும்.

பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.       88

விருந்தினரைப் போற்றி விருந்தோம்பலைச் செய்யாதவர்,  தாம் ஈட்டிய பொருளை வருந்திக் காத்து அப்பொருள் அழிந்த போது பொருளாசை அற்றேம் என்பர்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. 89

பொருள் உள்ள காலத்து வறுமையாவது, விருந்தோம்பலைச் செய்யாத அறிவின்மையாகும். அது அறிவில்லாதாரிடம் உள்ளது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. 90

எல்லாப் பூக்களிலும் மெல்லியதாகிய அனிச்சப்பூ மோந்தால் தான் வாடும்.  ஆனால், விருந்தினரோ முகம் வேறுபட்டுப் பார்த்த வுடனேயே வாடிவிடுவர்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...