January 6, 2020

நன்றியில் செல்வம்

நன்றியில் செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.         1001

மனைநிறைந்த பெரும் பொருளை ஈட்டிவைத்து இவறன்மையால் அதை உண்ணாதவன், உளனாயினும் செத்தவனாவான்அவனால் அப்பொருளைக் கொண்டு செய்யக் கிடந்தது எதுவும் இல்லை.   

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.         1002

பொருளினால் எல்லாம் உண்டாகுமென்று அறிந்து அதனை ஈட்டி, பின் பிறர்க்குக் கொடுக்காமல் கையழுத்தம் செய்யும் மயக்கத் தினால், அமைதியில்லாத வாழ்க்கை உண்டாகும்.  

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.  1003

பொருளீட்டுவதையே விரும்பிப் புகழை விரும்பாத மக்களது பிறப்பு, நிலத்துக்குச் சுமையாகும்.    

எச்சம்என்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.       1004

ஒரு பொருளும் ஈயாமையால் ஒருவராலும் விரும்பப் படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பதாக எதைக் கருதுவானோ?  

கொடுப்பதூஉம் துய்யப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.     1005

பிறர்க்குக் கொடுப்பதும் தாம் நுகர்வதும் இல்லாதவர்க்கு, பலவாக அடுக்கிய கோடி பொருள் உண்டாயினும் அதனால் பயனில்லை.  

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான்  தக்கார்க்குஒன்று
ஈதல் இயல்பிலா தான்.            1006

தானும் நுகராதவனாய், தகுதியுடையார்க்கு ஒன்றைக் கொடுக்கும் இயல்பும் இல்லாதவனாயின், பெரிய செல்வத்திற்கு அவன் ஒரு நோயாவான்.   

அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. 1007

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுக்காதவனுடைய செல்வம், மிக்க நலத்தினைப் பெற்ற ஒரு பெண் மணமின்றித் தனியாளாய்ப் பருவ முதிர்ந்த தன்மையது.     
 
தச்சுப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுந் தற்று.   1008

ஈயும் இயல்பு இல்லாமை பற்றிப் பிறரால் விரும்பப் படாதவன் செல்வமானது, ஊரின் நடுவில் உள்ளதோர் நச்சுமரம் பழுத்தாற் போலும்.  

அன்புஓரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.        1009

ஒருவன் உறவினரிடம் அன்பு காட்டுவதை நீக்கி, வேண்டுவன நுகராது தன்னை வருத்தி, வறியார்க்கீதல் முதலிய அறத்தையும் எண்ணிப்பாராது, சேர்த்த மிக்க பொருளைக் கொண்டு பிறர் பயனடைவர்.   

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.     1010

புகழுடைய செல்வரது, சிறிது காலம் நிற்பதாய வறுமை யானது, முகில் மழை பெய்யாமல் வறுமை மிகுந்தாற் போன்ற இயல்பை உடையது.    

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...