வெருவந்த செய்யாமை
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561
ஒருவன் செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து, பின்னும் அது செய்யாமல் இருத்தற்காக, அக்குற்றத்திற்கு ஏற்றவாறு ஒறுப்பவனே அரசனாவான்.
கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர். 562
செல்வம் தம்மிடம் நெடுங்காலம் நிலை பெறுதலை விரும்புவர், அளவு கடந்து செய்வார் போல் தொடங்கி, செய்யுங்கால் அளவு கடவாமல் செய்ய வேண்டும்.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563
குடிமக்கள் அஞ்சத்தக்க செயல்களைச் செய்யும் அரசன், கட்டாயம் விரைவில் கெடுவான்.
இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். 564
குடிமக்களால் நம் அரசன் பொல்லாதவன் என்று சொல்லப்படும் துன்பந்தரும் சொல்லையுடைய அரசன், வாழ்நாள் குறைந்து விரைவில் கெடுவான்.
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண்டு அன்னது உடைத்து. 565
தன்னைக் காண வேண்டி வந்தோர்க்கு அரிய செவ்வியையும் கண்டால் இனிமையில்லாத முகத்தையும் உடையவனது பெரிய செல்வம், அச்சந்தரும் பொருளைக் கண்டது போல அச்சந்தருதலை உடையது.
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடுஇன்றி ஆங்கே கெடும். 566
ஒருவன் கடுமையான சொற்களை யுடையவனும் இரக்கம் இல்லாதவனும் ஆனால், அவனது பெரிய செல்வம் நிலைக்காமல் அப்போதே கெடும்.
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். 567
கடுஞ்சொல்லும் குற்றத்திற்கு மிக்க தண்டனையும், அரசனது பகையை வெல்லும் வலிமையாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாகும்.
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு. 568
அரசியல் காரியத்தை அமைச்சரோடு கலந்து ஆராயாத அரசன், அத்தவறுதலால் தன் காரியந்தப்பிய விடத்துத் தன்னைச் சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தி அவ்வமைச்சரை வெகுளுவானாயின், அவன் செல்வஞ் சுருங்கும்.
செருவந்த போழ்தின் சிறைசெய்யா வேந்தன்
வெறுவந்து வெய்து கெடும். 569
போர் வருவதற்கு முன்னே தனக்குப் பாதுகாப்பைச் செய்து கொள்ளாத அரசன், போர் வந்த போது பாதுகாப்பின்மையால் அஞ்சி விரைவிற் கெடுவான்.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லது
இல்லை நிலக்குப் பொறை. 570
கொடுங்கோலரசன் கல்லாதவர்களைத் தனக்கு உறுப்பாகக் கூட்டிக் கொள்வான். அதுவல்லாமல் நிலத்திற்கு மிகுந்த சுமை வேறு இல்லை.
No comments:
Post a Comment