சுற்றம் தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. 521
ஒருவன் செல்வமிழந்து வறியவனான போதும் அவனுடைய பழைய நிலைமையைப் பாராட்டி உடன் வாழுந்தன்மை, சுற்றத் தாரிடமே உண்டு.
விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும். 522
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைக்குமாயின், அது கிளைத்தல் நீங்காத பல செல்வங்களையும் கொடுக்கும்.
அளவளாவ இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. 523
சுற்றத்தாரோடு மனங்கலந்து வாழாதவனது வாழ்க்கை யானது, குளத்தினது பரப்பு கரையில்லாமல் நீர்நிறைந்தாற் போன்றது.
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன். 524
செல்வம் பெற்றதால் அடைந்த பயனாவது, ஒருவன் தனது சுற்றத்தினால் தான் சூழப்படும்படி நடத்தலாம்.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். 525
ஒருவன் வேண்டுவன கொடுத்தலும் இன்சொல் தொடர் தலும் செய்வானாயின், அவன் தொடர்ந்த சுற்றத்தால் சூழப்படுவான்.
பெருங்கொடையான் பேணான் வெகுளி
அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். 526
மிகுந்த கொடையையுடையவனாய் வெகுளியை விரும்பாதவ னாயின், அவனைப் போலச் சுற்றமுடையார் இவ்வுலகத்தில் இல்லை.
காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. 527
காக்கையானது இரையைக் கண்டதும் மறைக்காது தன் இனத்தை அழைத்து உண்ணும். செல்வங்களும் அத்தகைய இயல்பினர்க்கே உள்ளனவாகும்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். 528
அரசன் எல்லோரையும் ஒரு தன்மையாக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானாயின், அச் சிறப்பை நோக்கிப் பல சுற்றத்தார் அவனைச் சூழ்ந்து வாழ்வர்.
தமர்ஆகிக் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். 529
முன்னே சுற்றத்தாராக இருந்து, யாதானுமொரு காரணத்தால் தன்னொடு பொருந்தாலு தன்னைவிட்டுப் பிரிந்து போனவர் பின்னும் வந்து சுற்றமாதல், அப்பொருந்தாமைக் காரணம் இப்போது தன்னிடம் இல்லையாக உண்டாகும்.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். 530
தன்னிடமிருந்து பிரிந்து போய்ப் பிறகு ஒரு நோக்கங் கொண்டு தன்னிடம் வந்தவனை, அரசன் அந்நோக்கத்தை நிறைவேற்றி வைத்து ஆராய்ந்து தழுவிக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment