நட்பு
செயற்குஅரிய யாவுள
நட்பின் அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு. 781
நட்புப் போலச் செய்து கொள்ளுதற்கு அரிய பொருள்கள் எவை உள்ளன? செய்து கொண்டால், அந் நட்புப் போலப் பகைவர் செய்யும் வினைக்கு அரிய காவல்கள் எவை உள்ளன? ஒன்றுமில்லை.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு. 782
அறிவுடையோர் நட்புக்கள் பிறை நிறையுந் தன்மை போல நாடோறும் நிறையுந் தன்மையவாம். அறிவிலார் நட்புக்கள் முழுமதி பின் குறையுந் தன்மைபோல் நாடோறும் குறையுந் தன்மையவாம்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. 783
நற்குணமுடையவர் நட்பானது பழகுந்தோறும் அவர்க் கின்பஞ் செய்தல், நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. 784
ஒருவரோடொருவர் நட்புக் கொள்ளுதல் கூடிப் பேசி மகிழ்வதன் பொருட்டன்று; ஒருவர் தகாத செயலைச் செய்யத் தொடங்கிய போது மற்றொருவர் முற்பட்டு இடித்துரைத்தற் பொருட்டே யாகும்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும். 785
ஒருவரோடொருவர் நட்பாவதற்குப் புணர்ச்சியும் பழகுதலு மாகிய காரணங்கள் வேண்டியதில்லை. இருவர்க்கும் ஒத்த உணர்ச்சியே நட்பாகிய உரிமையைக் கொடுக்கும்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்(து)
அகநக நட்பது நட்பு. 786
அகமலராமல் கண்ட போது, முகம் மாத்திரம் மலரும்படி நட்பது நட்பாகாது. அகமும் மலர நட்பதே நட்பாகும். அகமும் முகமும் மலர நட்பதே நட்பாகும்.
அழிவி னவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. 787
கேட்டினைத் தரும் தீய வழிகளில் செல்லும்கால் விலக்கி நல்ல வழிகளில் செல்லாக்கால் செல்லும்படி செய்து, தம்மால் விலக்க முடியாத கெடுதி வந்த போது தானும் உடன் துன்புறுவதே ஒருவனுக்கு நட்பாகும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. 788
ஒரு கூடாரத்தில் பேசிக் கொண்டு நிற்கையில் ஆடை அவிழ்ந் தால் உடனே நமது கை தானாகவே சென்று அவ்வாடையை உடுத்தி மானத்தைக் காப்பது போல, நண்பனுக்குத் துன்பம் வந்தால் அவ்வாறே தானே முன் வந்து அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்புஇன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789
நட்புக்கு அரசிருக்கை எது என்றால், எப்போதும் மன வேறு பாடில்லாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் உதவித் தன் நண்பனைத் தாங்கும் நிலையே யாகும்.
இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
790
இவர் நமக்கு இத்தகைய அன்பினர், நாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரை யயாருவர் புகழ்ந்து கூறினும், நட்பின் பெருமை குறைந்து விடும்.
No comments:
Post a Comment