அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும். 71
அன்பை அடைத்து வைக்கும் தாழ்ப்பாளும் உண்டோ? தம் அன்பரது துன்பங்கண்ட விடத்து, அன்புடையார் கண்களிலிருந்து ஒழுகுகின்ற புல்லிய கண்ணீரே அவரிடத்துள்ள அன்பைப் பலருமறியச் செய்யும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. 72
அன்பில்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரியராவர். அன்புடையவர் அப்பொருள்களே யன்றி உடம்பினையும் பிறர்க்கு உரியராக உடையர்.
அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. 73
அருமையான நமது உயிர்க்கு உடம்போடு பொருந்திய நட்பை, அன்போடு பொருந்திய செயல் என்பர் அறிவுடையோர்.
அன்புஈனும் ஆர்வம் உடமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. 74
நாம் பிறரிடம் காட்டும் அன்பு அவர்க்கு நம்மீது விருப்பத்தை உண்டு பண்ணும், அவ்விருப்பம் நட்பு என்னும் மிக்க சிறப்பினைத் தரும். அன்பே நட்புக்குக் காரணமாகும்.
அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75
உலகத்தில் இன்பம் துய்ப்பவர்கள் பெறும் சிறப்பினை பிறரிடம் அன்புடையராய்ப் பொருந்தியிருந்த செயல் என்பர்.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. 76
உண்மையுணராதவர், நன்மையைச் செய்வதற்கே அன்பு துணை யாகும் என்பர். தீமையைப் போக்குவதற்கும் அவ்வன்பே துணை யாகும்.
என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம். 77
எலும்பில்லாத புழுப் பூச்சிகளை வெயில் சுடுவது போல, அன்பில்லாதவர்களை அறநெறி சுடும்.
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. 78
உள்ளன்பில்லாதவர்
வாழும் வாழ்க்கையானது, வலிய நிலத்தின் கண் வறண்ட மரம் தளிர்த்தால் போன்றது.
புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு அன்பி லவர்க்கு. 79
உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, வெளியுறுப்புக் களெல்லாம் பிறர்க்கு என்ன நன்மை செய்யும்? ஒன்றும் செய்யாது.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. 80
அன்போடு பொருந்திய உடம்பே உயிர்நிலை பெற்ற உடம் பாகும். அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் எலும்பைத் தோலால் மூடியவையே யாகும். உயிர் நிலை ‡ உடம்பு. அன்பே உயிர்.
No comments:
Post a Comment