January 3, 2020

புணர்ச்சி மகிழ்தல்


புணர்ச்சி மகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும்   ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.      1101

கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புல இன்பமும், இவ்வொள்ளிய வளையல்களை உடையவ ளிடமே உள்ளன. 
 
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.        1102

நோய்க்கு மருந்து பிறிதொன்று, இவ்வணி இழையாள் தன்னோய்க்கு மருந்தும் தானே ஆயினாள்.  

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. 1103

தம்மால் விரும்பப்படும் மகளிர் தோள் மேல் துயிலும் துயிலைக் காட்டிலும், தாமரைக் கண்ணான் உலகின்கண் மிகுதியான இன்பம் உண்டோ? இல்லை.
  
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள். 1104

தன்னை விட்டு நீங்கினால் சுடும். தன்னை நெருங்கினால் குளிரும். இத்தன்மை வாய்ந்த நெருப்பை, எவ்விடத்தில் பெற்றாள்.   

வேட்ட பொழுதின் அவையவை போலும்
தோட்டார் கதுப்பினாள் தோள்.         1105

பூவையணிந்த கூந்தலையுடைய தோள்கள், விரும்பிய பொருள்களைப் பெறாது அவற்றை விரும்பிய போதெல்லாம் அப்பொருள்கள் நினைவுக்கு வந்து இன்பஞ் செய்யுமாறு போல் இன்பஞ் செய்யும்.  

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 1106

தம்மைச் சேருந் தோறும் வாடிய என்னுயிர் தழைக்கும்படி தீண்டுதலால், இப்போதைக்குத் தோள்கள் அமிழ்தினால் செய்யப்பட்டவை யாகும். 
  
தம்இல் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.         1107

அழகிய பொன்னிறமுடைய அரிவையின் புணர்ச்சியானது, தமது வீட்டிலிருந்து தமது பொருளை இல்லாதார்க்குப் பங்கிட்டுக் கொடுத்து உண்டாற் போலும்.  

வீழுமட் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.            1108

காற்றினால் இடையறுக்கப்படாத புணர்ச்சியானது, ஒருவரை யயாருவர் விரும்பும் இருவர்க்கும் இனிதேயாம்.  

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.  1109

புணர்ச்சியின்பம் மிகும் பொருட்டு ஊடுதலும், ஊடல் நீங்கு தலும், பின் கூடுதலும் என்னும் இவை யன்றோ மணந்து கொண்டு இடையறாத இன்பம் எய்தியவர் பெற்ற பயன்கள்.  

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.        1110

சிவந்த அணிகளை யுடையவளைப் புணரப் புணரக் காதலானது, கற்று அறிய அறிய முன்னிருந்த அறியாமையைக் கண்டது போலும்.  

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...