January 6, 2020

பழைமை

பழைமை

பழைமை எனப்படுவது யதுஎனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.           801

பழைமை யயன்று சொல்லப்படுவது யாதென்றால், பழகியவர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் விலக்காமல் அவற்றிற்கு உடம்படும் நட்பு.

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.    802

நட்புக்கு உறுப்புக்களாவன நண்பர்கள் உரிமையால் செய்வன. அதனால், அவ்வுரிமைக்கு இனியராதல் சான்றோர்க்கு முறைமை யாகும்.

பழகிய நட்பு எவன்செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.          803

நண்பர் உரிமையால் செய்தவற்றைத் தாம் செய்தவை போல் உடம்படாராயின், அவரோடு பழகிய நட்பு என்ன பயனைச் செய்யும்?

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின்.         804

தமது காரியத்தை நண்பர் உரிமையால் தம்மைக் கேளாது செய்தாரானால், அச்செயலினது விரும்பப்படுந் தன்மையால் விரும்பி இருப்பர் அறிவுடையோர்.  

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்.       805

தாம் வெறுக்கத் தக்கவற்றை நண்பர் செய்தால், அதற்குக் காரணம் அறியாமை அல்லது மிகுந்த உரிமை என்று கொள்க.

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.          806

நட்பின் வரம்பைக் கடவாது நிற்பவர், தம்மோடு பழைமையில் மாறுபடாது நின்ற நண்பர்களது நட்பை, அவரால் தமக்குப் பொருட்கேடோ தொழிற்கேடோ வந்தவிடத்தும் விடார்.

அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.     807

அன்புடன் பழமையாய் வந்த நட்பையுடையவர், தம் நண்பர் தமக்கு அழிவுதரத் தக்கவற்றைச் செய்தாலும் அவரிடத்து அன்பு நீங்கார்.

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்.        808

நண்பர் செய்த பிழையைப் பிறர் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாத  உரிமையறிய வல்லார்க்கு, நண்பர் பிழை செய்வாராயின் அந்நாள் நல்ல நாளாகும்.

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.    809

உரிமையறாமல் பழையதாய் வந்த நட்பினையுடையாரது நட்பினை அவர் பிழை செய்தாராயினும் விடாதவரை, உலகம் நட்புக் கொள்ள விரும்பும்.

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். 810

பழைய நண்பர் பிழை செய்தாராயினும் அவரிடத்துத் தம் பண்பினின்று நீங்காதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...