January 3, 2020

தகை அணங்கு உறுத்தல்

தகை அணங்கு உறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.     1081

கனவிய குழையனை யுடையாள், அணங்கோ, சிறந்த மயிலோ அல்லது ஒரு தமிழ்ப் பெண்ணோ, இவளை இன்னாளென்று துணிய மாட்டாது என் உள்ளம் மயங்குகிறது.    

நேக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.          1082

இத்தகைய அழகுடையாள் எனது நோக்கத்திற்கு எதிர் நோக்குதல், தானே வருத்தும் அணங்கு வருத்துதற்கு ஒரு படையை யும் கொண்டு வந்த தன்மையை உடையது

பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை இனியறிந்தேன்
பெண்தகையால் பேரமர்க் கட்டு.      1083

கூற்று என்று நூலோர் சொல்வதை முன்பு கேட்டு அறிவதல்லது கண்டறியேன், இப்போது அறிந்தேன். அது பெண் தகைமை யுடன் பெரிய அமர்த்த கண்களையுடையது

கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால் பெண்தகை
பேதைககு அமர்த்தன கண்.    1084

பெண் தன்மையை உடைய இவளுக்கு உள்ள கண்கள், தம்மைக் கண்டவரது உயிரை உண்ணும் தோற்றத்துடனே கூடி மாறுபட்டிருக்கின்றன.
 
கூற்றமோ கண்ணோ பினையோ மடவால்
நேக்கம்இம் மூன்றும் உடைத்து.      1085

என்னைத் துன்பப் படுத்துதலால் கூற்றமோ? என் மீது இரக்கங் கொண்டு பார்த்தலால் கண்ணோ? இயல்பாக அஞ்சுதலால் பெண் மானோ? அறிகிலேன். இவள் நோக்கம் இம் மூன்று தன்மைகளையும் உடையதாயிருக்கிறது

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
செய்யல மன்இவள் கண்.       1086

கொடிய புருவங்கள் கோணுதலில்லாமல் தடுக்குமானால், அப்புருவங்களைக் கடந்து வந்த இவள் கண்கள் எனக்கு நடுக்கத்தைத் தரும் துன்பத்தைச் செய்ய மாட்டா

கடாஅக் களற்றின்மேல் கட்படா மாதர்
படாஅ முலைமேல் துகில்.     1087

இவளது சாயாத முலை மேலிட்ட மேலாடையானது, வெறி யானையன் கண்களை மறைத்திட்ட முக படாத்தினை ஒக்கும்.

ஒண்ணுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.            1088

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சும் எனது வலி, இவளது ஒளி பொருந்திய நெற்றிக்கு ஆற்றாது அழிந்துவிட்டது.  

பினைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து.    1089

பெண்மானைப் போன்ற அஞ்சுந் தன்மையையுடைய பார்வையை யும், நாணத்தையும் உடைய இவளுக்கு வேறு அணிகலன்கள் கொண்டு வந்து அணிவது யாது கருதியோ?  

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.        1090

தன்னை உண்டவர்க்கு மட்டுமே அல்லாது, காமத்தைப் போலத் தன்னைக் கண்டவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தல் இல்லை

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...