பொருள் செயல் வகை
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள். 751
ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிக்கப் படுபவராகச் செய்ய வல்ல பொருளை யல்லது, சிறந்த பொருள் வேறு இல்லை.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு. 752
நல்லோராயினும் பொருளில்லாதவரை எல்லோரும் இகழ்வார் கள். தீயோராயினும் பொருளுடையவரை எல்லோரும் போற்று வார்கள்.
பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. 753
பொருள் என்னும் அணையா விளக்கு, தன்னையுடையார் நினைத்த இடத்தில் சென்று பகையயன்னும் இருளைக் கெடுக்கும்.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள். 754
செய்யுந் திறனறிந்து பிறருக்குத் தீமை பயத்தல் இன்றி வந்த பொருளானது, அறத்தையும் கொடுக்கும். இன்பத்தையும் கொடுக்கும்.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
755
தம் குடிமக்களிடம் செலுத்தும் அருளுடனும் அவர் தம்மிடம் செலுத்தும் வாராத பொருளீட்டத்தை, அரசர் பொருந்தாது போக விட வேண்டும்.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். 756
உடையவரில்லாமையால்
தானே வந்து சேர்ந்த பொருளும், சுங்க வரியாகிய பொருளும், தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும், அரசனுக்குரிய பொருள்களாகும்.
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு. 757
அன்பினால் பெறப்படும் அருள் என்னும் குழந்தையானது, பொருள் என்னும் செல்வத்தையுடைய வளர்ப்புத் தாயால் வளரும்.
குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை. 758
தன் கையில் பொருள் உண்டாக ஒரு செயலைச் செய்தல், மலை மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டதனோடொக்கும்.
செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனிற் கூரியது இல். 759
தமக்குச் சிறப்பு வேண்டுபவர் பொருளை ஈட்டுக. பகைவர் செருக்கை யறுக்கும் படைக்கலம் ஆகும் அது. அச் செறுக்கறுக்க அப் பொருளைப் போலக் கூரிய படைக்கலம் வேறில்லை.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. 760
நல்ல பொருளை மிகப்படைத்தவர்க்கு, மற்றைய அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாகும்.
No comments:
Post a Comment