January 6, 2020

படைமாட்சி


படைமாட்சி

உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாந் தலை.                     761

யானை முதலிய நால்வகை உறுப்புக்களும் நிறைந்து, போரின்கண் உண்டாகும் துன்பத்திற்கு அஞ்சாது நின்று பகையை வெல்லும் படையானது, அரசனுடைய செல்வங்களெல்லா வற்றுள்ளும் தலையாய செல்வமாகும்.
 
உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண்  தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது.                 762

தான் குறைந்த விடத்தும் போரில் அழிவு வந்த போது தன் மீது காயம் படுவதற்கு அஞ்சாத வீரம், மூலப்படைக்கல்லால் பிற படைக்கு உண்டாகாது.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.                           763

எலியாகிய பகை திரண்டு கடல்போல் ஒலித்தால் நாகப்பாம்புக்கு என்ன துன்பம் வரும்? அப்பாம்பு மூச்சுவிட்டவுடனே அவ்வெலிக் கூட்டம் ஓடும்.

அழிவின்று அறைபோகாது ஆகி வழிவந்த
வண்கண் அதுவே படை.                            764

போரில் கேடடையாமாலும், பகைவரால் வஞ்சித்து மாறு படுத்தப்படாமலும் தொன்றுதொட்டு வந்த அஞ்சாமையை உடையதே படையாகும்.

கூற்றுஉடன்று  மேல்வரினினும் கூடி  எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.                                 765

கூற்றமே வெகுண்டு எதிர்த்துப் போர் செய்ய வந்தாலும், நெஞ்சொத்து அதன் எதிர் நின்று போர் செய்யும் வல்லமை யுடையதே படையாகும்.

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.                        766

வீரமும் மானமும் முன்னோர் சென்ற நல்ல வழியில் நடத்தலும் அரசனுடைய நம்பிக்கையைப் பெறுதலும் என்னும் இந்நான்கு குணமுமே படைக்கு அரணாகும்.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.                    767

தன் மேல் வந்த போரைத் தடுக்கும் தன்மையை அறிந்து, அப்பகைவரது முன்னணிப் படையைத் தன்மேல் வராமல் தடுத்துத் தான் அவர்மேல் செல்வதே படையாகும்.

அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.                  768

போர் செய்யும் வீரமும், பகைவர் தன்மேல் வந்தால் எதிர்த்து நிற்கும் வலியும் இல்லையயன்றாலும், தன்தோற்றப் பொலிவாலே பெருமை பெறும். 

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.                      769

அளவில் குறைதலும், மனத்தினின்றும் நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லையானால், படை பகையை வெல்லும்.

நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.                         770

போரில் நிலைத்து நிற்கும் வீரரை மிகுதியாக உடையதாயினும், தனக்குத் தலைவராகிய வீரரை இல்லாவிடத்துப் படை யானது போரில் நிலைத்து நிற்காது.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...