அருள் உடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. 241
செல்வங்களுள் சிறந்த செல்வமாவது அருளாகிய செல்வம். பொருள் செல்வம் கீழோரிடத்தும் உள்ளது.
நல்ஆற்றால் நாடி அருள்ஆள்க பல்ஆற்றால்
தேரினும் அஃதே துணை. 242
நல்ல வழிகளால் ஆராய்ந்து அருளைக் கைக்கொள்க. பல வழிகளால் ஆராயினும் அவ்வருளே துணையாகும்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். 243
அறியாமை பொருந்திய துன்பவுலகத்தில் புகுதல், அருள் பொருந்திய மனத்தை யுடையார்க்கு இல்லை.
மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்ப
தன்உயிர் அஞ்சும் வினை. 244
பிற உயிர்களைக் காத்து அவற்றினிடம் அருள் கொள்வானுக்கு, தனது உயிரைப் பற்றி அஞ்சும் தொழில் இல்லை என்பர் பெரியோர்.
அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி. 245
அருளுடையார்க்குத்
துன்பம் இல்லை. காற்று உலாவுகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தினர் இதற்குச் சான்று.
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார். 246
தம் மனத்திருந்த அருள் நீங்கி தகுதியல்லாதவற்றைச்
செய் தொழுகுவாரை, அறத்தையும் இழந்து தம் கடமையையும் மறந்தவர் என்பர் உலகோர்.
அருள்இல்லார்க்கு
அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லையானாற் போல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு மறுமையின்பம் இல்லை.
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது. 248
பொருளை இழந்தவர் எப்போதேனும் பொருளுண்டாகப் பெறுவர். அருளை இழந்தவர் இழந்தவரே. ஒருபோதும் அதனைப் பெற முடியாது.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். 249
ஆராயுங்கால், உயிர்களிடத்து அருளில்லாதவன் செய்யும் அறமானது, தெளிந்த அறிவில்லாதவன் உண்மைப் பொருளைக் கண்டது போலும்.
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. 250
தான் தன்னிலும் வலியில்லார் மேல் வெகுண்டு செல்லும் பொழுது, தன்னிலும் வலியார் முன்பு தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்க்கக் கடவன்.
No comments:
Post a Comment