உறுப்புநலம் அழிதல்
சிறுமை நமக்கொழியச் சேண்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின் கண். 1231
இவ்வாற்றாமை நம்மிடத்தே நிற்க, நெடுந்தொலைவு சென்ற நம் காதலரை நீ நினைத்தழுதலால், நின் கண்கள் ஒளியிழந்து, முன் தமக்கு நாணிய நறுமலர்களுக்குத் தாம் இப்போது நாணிவிட்டன.
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். 1232
பசப்பெய்தி நீர் வடிகின்ற நின் கண்கள், நம்மால் விரும்பப் பட்டவரது அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுகின்ற போலும்! இனி நீ ஆற்றல் வேண்டும் என்பதாம். இதுவுமது.
தணந்தமை சால அறவிப்ப போலும்
மணந்தாள் வீங்கிய தோள். 1233
காதலரை மணந்த நாட்களில் இன்ப மிகுதியால் பெருத்த நின் தோள்கள், அவர் பிரிந்தமையை மிகவும் உணர்த்துகின்றன போல மெலிகின்றன. இஃதறிந்தார் அவரைப் பழிப்பர் என்பதாம். இதுவுமது.
பனைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். 1234
துணை வரை நீங்கப் பெற்று அதனால் பழைய அழகை இழந்த தோள்கள் மெலிந்து, பசிய பொன்னால் செய்த வளையல்கள் கழலுகின்றன. இதுவுமது. பணை: பெருமை.
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியோடு
தொல்கவின் வாடிய தோள். 1235
வளையல்களும் கழன்று, பழைய அழகையும் இழந்த தோள்கள், கொடிய காதலரது கொடுமையைத் தாமே சொல்லுகின்றன. அயலார் சொல்ல வேண்டியதில்லை.
தொடியோடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. 1236
யான் ஆற்றவும் என் வழிப்படாது, வளையல்கள் சுழலுமாறு தோள்கள் மெலிய, நீ அவரைக் கொடியார் என்று கூறுதற்குப் பொறுக்காமல் வருந்துகின்றேன்.
பாடு பெறுதியே நெஞ்சே கொடியர்க்குஎன்
வாடுதோள் பூசல் உரைத்து. 1237
நெஞ்சமே! நீ கொடியவராகிய காதலர்க்கு எனது மெலிகின்ற தோள்கள் ஊரில் உண்டாக்கிய அலரை உரைத்து, அதனால், மேம்பாடு பெறுவாயோ?
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். 1238
அவளை இறுகத் தழுவிய கைகளை அவளுக்கு நோகுமென்று எண்ணி ஒரு நாள் சிறிது தளர்த்தவே, அப்போதே பசிய வளையல்களையுடைய பேதையின் நெற்றியானது பசலை நிறம் எய்தியது.
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். 1239
அவ்வாறு தழுவிய கைகளைத் தளர்த்தினதால், அத்தழுவிய என் கைகளுக்கும் அவளுக்கும் இடையே சிறு காற்று நுழையவே, அவ்வளவு நுண்ணிய இடையீட்டையும் பொறாது பேதையின் பெரிய குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. அத்தன்மையான கண்கள் மலையும், காடும் நாடுமாகிய இவ்விடையீடுகளை எவ்வாறு பொறுத்தனவோ?
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. 1240
ஒளி பொருந்திய நெற்றி பசந்தது கண்டு, தண்வளி போழவந்த (1239) கண்ணின் பசலை துன்ப முற்றது.
No comments:
Post a Comment