January 6, 2020

உழவு


உழவு

சழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.          1031

உழவுத்தொழிலால் உண்டாகும் மெய்வருத்தத்தை நோக்கிப் பிற தொழில்களைச் செய்தாலும் உலகத்தோர் ஏருடையோர் இடத் திற்கே வருவர். ஆதலால் வருந்தியும் உழுதலே தலைமையான தொழிலாகும்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.       1032

உழவுத் தொழிலைச் செய்யமாட்டாது வேறு தொழில்களின் மேற் செல்வோர் யாவரையும் தாங்குதலான், உழுவார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவார். 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.           1033

யாவரும் உண்ணும்படி உழவுத்தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உரிமையுடன் வாழ்பவராவர். பிறரெல்லாம் அவ்வுழவுத்தொழிலைப் பின்பற்றி வாழ்பவராவர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.     1034

உழவுத் தொழிலால் நெல்லினை யுடையவரான அருளுடையார், பல வேந்தர்களது குடை நிழலில் உள்ள மண் முழுவதையும் தமது வேந்தரின் குடைநிழலின் கீழ் காண்பர்.

இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.            1035

தம் கையினால் உழவுத் தொழில் செய்து உண்ணும் இயல்பு டையவர் பிறரிடம் இரக்கமாட்டார். தம்மிடம் வந்து இரப்பவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஒளிக்காமல் கொடுப்பர்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.         1036

உழவர்கள் கை, அத் தொழிலைச் செய்யாதிருக்குமாயின், எப்பொருளையும் துறந்தேம் என்பவர்களுக்கும் அத்துறவற நிலையில் நிற்றல் முடியாது.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.         1037

உழவன் உழுத நிலத்தின் ஒரு பலப் புழுதியைக் காற்பலமாக உலரும்படி செய்வானாயின், அந்நிலத்தின் கண் செய்த பயிர் ஒருபடி எருவும் வேண்டாது மிகுதியாக விளையும்.

ஏரினும் நன்றாலர் ஏதுஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு.    1038

உழுதலினும் எருவிடுதல் நல்லது. உழுது எருவிட்டு விதைத்த பயிர்க்குக் களை களைந்தபின் பயிரைக் காத்தல் அப்பயிருக்கு நீர் பாய்ச்சுதலினும் நல்லது. 

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.         1039

நிலத்திற்கு உரியோன் நிலத்திற்கு நாடோறும் செல்லாமல் சோம்பியிருப்பானாயின், அந்நிலம் அவன் மனைவியைப் போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் ஊடிவிடும்.

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்.         1040

யாம் வறியோம் என்று சொல்லிச் சோம்பி இருப்பாரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தனக்குள் சிரிப்பாள்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...