January 6, 2020

இன்னா செய்யாமை


இன்னா செய்யாமை

சிறப்புஈனும் செல்வம் பெறினும்  பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.          311

சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெற்றாலும், பிறர்க்குத் துன்பஞ் செய்யாதிருத்தல் குற்றமற்றவரது கொள்கை.

கறுத்துஇன்னா செய்தஅக் கண்ணும்  மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.     312

வெகுண்டு தமக்குத் துன்பஞ் செய்தவனிடத்தும், திருப்பி அவனுக்குத் துன்பஞ் செய்யாமல் இருப்பதே குற்றமற்றவர் கொள்கை.

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும். 313

தானொரு குற்றமும் செய்யாதிருக்கத் தனக்கு துன்பஞ் செய்தவர்க் கும் தாம் துன்பஞ் செய்வாராயின், அச்செயல் அவர்க்குக் கடக்க முடியாத துன்பத்தைத் தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.         314

தமக்குத் துன்பஞ் செய்தவரைத் தண்டித்தலாவது, அவர் வெட்கப்படும்படி நல்ல நன்மைகளைச் செய்து அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுவதே.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றக் கடை.      315

பிறிதோர் உயிர்க்குண்டாம் நோயைத் தமக்குற்ற நோய் போல எண்ணிக் காவாத இடத்து, அறிவினால் ஆவதொரு பயனுண்டோ? இல்லை.

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.           316

இவை துன்பந் தருவனவென்று தான் அறிந்தவற்றை, பிறனிடத்துச் செய்தலைப் பொருந்தாமை வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்
மாணாசெய் யாமை தலை.    317

எவ்வகையாலும் எப்போதும் எவர்க்கும், மனமறியத் துன்பந்தரும் செயல்களைச் செய்யாமை முதன்மையானது.

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்உயிர்க்கு இன்னா செயல்.           318

தனக்குப் பிறர் செய்யும் துன்பத்தை அறிகின்ற ஒருவன், பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்தல் என் நினைந்தோ?

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின்  தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.  319

பிறர்க்கு முற்பொழுது துன்பஞ் செய்தால், தமக்குப் பிற்பொழுது துன்பம் தாமே வரும்.

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்  நோய்செய்யார்
நோய்இன்மை வேண்டு பவர்.           320

இப்போதுள்ள துன்பமெல்லாம் முன்பு பிறர்க்குத் துன்பஞ் செய்தார் மீதே உள்ளன. ஆதலால், பின்பு துன்பப்படாமையை விரும்புகின்றவர்கள் இப்போது பிறர்க்குத் துன்பஞ் செய்ய மாட்டார்.


No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...