January 6, 2020

கள் உண்ணாமை


கள் உண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.      921

கள்ளின் மீது விருப்பம் கொண்டு வாழ்பவர், எப்போதும் பகைவரால் அஞ்சப்படார். அதுவேயின்றி முன் அடைந்திருந்த பெருமையையும் இழப்பர்.

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால்
எண்ணப்பட வேண்டா தார்.    922

அறிவுடையோர் கள்ளை உண்ணற்க. உண்ண விரும்பின் அறிவுடை யோரால் நன்கு மதிக்கப்பட வேண்டாதார் உண்க. கள்ளுண்போரை அறிவுடையோர் மதியார்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.        923

யாது செய்யினும் மகிழும் தாய் முன்பும் ஒருவன் கள்ளுண்டு  களித்தல், துன்பந் தருவதாகும். அவ்வாறிருக்க, அறிவுடையோர் முன்னிலையில் கள்ளுண்டு களித்தல் அவர்க்கு என்னாம்?

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.      924

கள் என்று சொல்லப்படும் பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தை உடையார்க்கு, நாண் என்று சொல்லப்படும் நல்லவன் முதுகு காட்டி நீங்குவாள்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.     925

ஒருவன் பொருளைக் கொடுத்து மெய்ம்மறதியைக் கைம்மாறாகப் பெற்றுக் கொள்ளுதல். செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடையது.  மெய்ம்மறதிதன் உடல் நிலையைத் தான் அறியாமை.

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்உண் பவர்.   926

உறங்குபவர் அறிவை இழப்பதனால் செத்தாரைக் காட்டிலும் வேறல்லர். அவ்வாறே எப்போதும் கள்ளுண்பவர் மயக்கமடைதலால் நஞ்சுண்பவர் ஆவர்.

உளஒன்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ஒற்றி கண்சாய் பவர்.        927

கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு சோர்பவர். உள்ளுரில் வாழ்பவரால் உள்ளது உய்த்துணரப் பெற்று எப்போதும் சிரிக்கப்படுவார்.

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.           928

நான் கள்ளுண்டாலும் களித்து அறியேன் என்று சொல்வதை விட்டுவிடுக. உண்ணாத போது நெஞ்சத்தில் மறைத்து வைத்த அக்களிப்பும் கள்ளை உண்ட அப்போதே வெளியில் வந்து விடும். 

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.        929

கள்ளுண்டு களித்தவனுக்கு அதை உண்ணுதல் கூடாது என்று காரணங்காட்டுவது, நீருள் மூழ்கினவனொருவன் விளக்குப் பிடித்துத் தேடுவதை ஒக்கும்.

கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.           930

ஒருவன் கள்ளுண்ணாத போது, கள்ளுண்டு களித்த மற்றொருவனைக் காணும் போதாகிலும், தான் உண்ணும் போது உண்டாகும் சோர்வை நினைக்க மாட்டான் போலும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...