January 6, 2020

குற்றம் கடிதல்


குற்றம் கடிதல்

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.    431

செல்வச் செருக்கும், சினமும், சிறுமைக்குணமும் இல்லாத வருடைய செல்வம், மேம்பாடான தன்மையது.

இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.  432

ஈயாத் தன்மையும், நன்மையின் நீங்கிய மானமும், அளவு கடந்த மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும்.

தினைத்துணையாம் குற்றம் வரினும்  பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.       433

பழிக்கு அஞ்சுபவர், திணையளவு குற்றம் வந்தாலும், அதைப் பனையளவாகக் கொள்வர்.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.   434

தனக்கு முடிவைத் தரும் பகை குற்றமேயாகும். ஆதலால் அக்குற்றத்தை ஒரு பொருளாகக் கொண்டு காக்க வேண்டும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.    435

குற்றம் வருமுன்னே அதைக் காவாதவனது வாழ்க்கையானது, நெருப்பின் முன்னுள்ள வைக்கோல் போரைப் போல அழியும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு. 436

முதலில் தன் குற்றத்தை நீக்கிப் பிறகு, பிறருடைய குற்றத்தைக் காண்பானாயின், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்? ஒன்று மில்லை.

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.      437

பொருளால் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல், அதன் மீது பற்றுள்ளம் வைத்தவனது செல்வம், பின்நிலைக்குந் தன்மையின்றிக் கெடும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.       438

பொருளைச் செலவிட வேண்டிய இடத்துச் செலவு செய்யாமல் அதன் மீது பற்றுள்ளம் என்னும் ஈயாத்தன்மை, எதனோடும் சேர்த்து எண்ணப்படுவ தொன்றன்று.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.    439

ஒருவன் தன்னைத் தானே எப்போதும் பாராட்டாதிருக்கக் கடவன். நன்மையை தராத செயலை விரும்பாதிருக்கக் கடவன்.

காதல் காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.      440

தான் விரும்புனவற்றின் மீதுள்ள தனது விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நடந்து கொள்வானாயின், பகைவரது கெடுக்க நினைக் கும் நினைப்பு பழுதாகும். 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...