January 6, 2020

பண்பு உடைமை


பண்பு உடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.       991

யாவரிடத்தும் எளிய செவ்வியராதலால், பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைதல் எளிதென்று சொல்லுவர் அறிவுடை யோர்.   
 
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.       992

யாவரிடத்தும் அன்புடையராயிருத்தலும் உயர்குடிப் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும், பண்புடைமை என்று உலகத்தார் கூறும் நன்னெறியாகும். 
 
உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.           993

செறியத் தகாத உறுப்புக்களால் ஒத்தல் ஒருவனுக்கு நன் மக்களோடு ஒப்பதாகாமையின் அது பொருந்துவதன்று. இனிப் பொருந்துவதான ஒப்பாவது செறியத்தக்க பண்பாலொத்தல். 

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.          994

முறையையும் அறத்தையையும் விரும்பிய பயனுடைய வரது பண்புடைமையை, உலகத்தார் கொண்டாடுவர்.   

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புஉள பாடறிவார் மாட்டு.            995

இகழ்ச்சியானது ஒருவனுக்கு விளையாட்டின் கண்ணும் துன்பந் தருவதாகும். ஆதலால், பிறர் இயல்பறிந்து நடப்பவர்களிடத்துப் பகையின் கண்ணும் இனிய பண்புகளே உள்ளன.  

பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.         996

பண்புடையவரிடத்திற் படுதலால், உலகியல் எப்போதும் நடைபெற்று வருகின்றது. இல்லையேல், உலகியல் மண்ணில் புகுந்து மாய்ந்து போய்விடும்.   

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.     997

மக்களுக்குரிய பண்பில்லாதவர், அரத்தின் கூர்மை போல அறிவுக் கூர்மையுடையவர் ஆயினும், ஓரறிவுயிரான மரத்திற்கு ஒப்பாவர்.
  
நண்புஆற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்புஆற்றா ராதல் கடை.      998

தம்மோடு நட்புச் செய்யாது, பகை செய்வாரிடத்தும், தாம்  பண்புடையவராய் நடந்து கொள்ளாமை அறிவுடையார்க்குக் குற்றமாகும்.  

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இன்று.            999

பண்பின்மையால் ஒருவரோடு கலந்து மகிழ மாட்டாதார்க்கு, மிகவும் பெரிய உலகமானது இருளில்லாத பகற்காலத்திலும் இருளின் கண் கிடந்ததாகும்.
   
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திருந் தற்று.            1000

பண்பில்லாதவன் பெற்ற பெருஞ் செல்வமானது ஒருவர்க்கும் பயன்படாமற் போதல், நல்ல மாட்டுப் பால் ஊற்றி வைத்த கலத்தின் குற்றத்தால் களிம்பேறி ஒருவர்க்கும் பயன்படாமல் போவது போலும்.  

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...