தெரிந்து தெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும். 501
அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறிந்து, பின்பு ஒருவனைத் தெளிய வேண்டும்.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு. 502
நற்குடியில் பிறந்து, குற்றங்களினின்று நீங்கி, பழிக்கு அஞ்சும் நாணுடையவனிடத்தே அரசன் தெளிவு வேண்டும். நாணுடைய வனையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
அரியகற்று ஆகஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. 503
அருமையான நூல்களைக் கற்றுக் குற்றமற்றவர்களாய் உள்ளவரி டத்தும், நன்க ஆராயுமிடத்துக் குற்றமின்மை அரிதாகும்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 504
ஒருவனுடைய குணங் குற்றங்களை ஆராய்ந்து, அக்குணங் குற்றங்களில் மிகுந்தவற்றை ஆராய்நது, அம்மிகுந்தவற்றைக் கொண்டு ஒருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். 505
மக்களடையும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும், தாம் தாம் செய்யும் செயல்களே உரை கல்லாகும்.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி. 506
சுற்றம் இல்லாதவரைத் தெளிதலை ஒழிக. அவர் உலகத்தோடு தொடர்பில்லாதவராவர். ஆகையால் பழிக்கஞ்சார்.
காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதமை எல்லாம் தரும். 507
அன்புடைமையைத் துணையாகக் கொண்டு அறிய வேண்டிய வற்றை அறியாதாரைத் தெளிதல், ஒருவனுக்கு எல்லா அறியாமை யையும் தரும்.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். 508
பிறனை ஆராயாது தன் குலத்தினன் என்று தெளிந்த வனுக்கு, அத்தெளிவு முடிவில்லாத துன்பத்தைக் கொடுக்கும்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். 509
யாரையும் ஆராயாது தெளியாதொழிக. ஆராய்ந்த பின்பு அவரால் தெளியப்படும் பொருள்களை ஐயுறாதொழிக.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். 510
No comments:
Post a Comment