தூது
அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்
பண்புஉடைமை தூது உரைப்பான் பண்பு. 681
தம்மரிடத்து அன்புடையவனாயிருத்தலும், சிறந்த நற்குடியில் பிறத்தலும், அரசன் விரும்பும் குணம் உடையவனாயிருத்தலும்,
இவை மூன்றும் தூதுரைப்பவனது இலக்கணமாகும்.
அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. 682
தம்மரசனிடத்து அன்புடைமையும், அறிவு ஆவன அறியுமறிவும், ஆராய்ந்து சொல்லும் சொல்வன்மையும் என தூதுரைப்பார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்றாகும்.
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. 683
வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன்னரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது, அறநூலை அறிந்தவர்களுள் தான் அந்நூலில் வல்லவனாதல்.
அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. 684
இயற்கையறிவும் கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவும், பலரோடும் பல காலும் ஆராய்ந்து கற்ற கல்வியுமென, இம் மூன்றும் நன்கு அமையப் பெற்றவனே வேற்று வேந்தரிடம் தூது செல்க.
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது. 685
சுருங்கச் சொல்லியும், கடுஞ்சொற்களை விலக்கி இனிய சொற்களால் கேட்போர் மனமகிழச் சொல்லியும், தன்னரசனுக்கு நன்மையை உண்டாக்குபவனே தூதனாவான்.
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. 686
அறநூல்களைக் கற்று, பகைவர் மனங்கொள்ளும்படி சொல்லி, பகைவர் சினந்து பார்த்தால், அப்பார்வைக்கு அஞ்சாது, காலத்தோடு பொருந்த அவ்வினை முடிக்கத் தக்க வழியறிபவனே தூதனாவான்.
கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை. 687
வேற்றரசனிடம் தான் நடந்து கொள்ளுமுறையறிந்து, அவர் செவ்வி பார்த்து, சொல்லுதற்கேற்ற இடம் அறிந்து, சொல்ல வேண்டியதை ஆராய்ந்து சொல்வான் தூதரில் சிறந்தவனாவான்.
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. 688
மனத் தூய்மையும் அவ்வேற்று வேந்தரது அமைச்சர் துணையும், அஞ்சாத மனவுறுதியும் ஆகிய இம்மூன்றையும் உண்மையாக உடைமை, தூதுவன் இலக்கணமாகும்.
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன். 689
தனக்கு வருந்துன்பத்திற்கு அஞ்சித் தன்னரசனுக்கு இழிவைத் தரும் சொற்களைத் தவறியும் சொல்லாத திண்மையுடையவனே, தன்னரசன் சொல்லி விட்ட சொல்லை வேற்றரசனுக்குச் சென்று உரைப்பவனாவான்.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. 690
தான் சொல்லும் சொல் தன்னுயிர்க்கு முடிவைத் தருமாயினும், அதற்கு அஞ்சிச் சொல்லுதல் ஒழியாது. தன்னரசனுக்கு நன்மையைத் தரும் சொற்களைச் சொல்பவனே தூதனாவான்.
No comments:
Post a Comment