January 3, 2020

படர் மெலிந்து இரங்கல்


படர் மெலிந்து இரங்கல்

மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.            1161

காம நோயை பிறர் அறிதற்கு நாணி யான் அதனை மறைப்பேன். அந்நோய் நீர் இறைப்பவர்க்கு ஊற்று நீர் ஊறுவது போல் மிகுகின்றது.   
 
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.   1162

இக்காம நோயை யான் மறைக்கவும் வலியில்லேன். நோய் செய்த காதலர்க்கு இதைச் சொல்லுவதும் எனக்கு நாணத்தைத் தருகிறது. இனி என் செய்வேன்.
    
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.      1163

காம நோயும் அதை செய்தவர்க்குச் சொல்ல வொட்டாத நாணமும், அவற்றைச் சுமக்க மாட்டாத என் உடம்பினிடத்து, உயிரைக் காவடித் தண்டாகக் கொண்டு அதன் இரு முனைகளிலும் தொங்குகின்றன.   

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.      1164

எனக்குக் காமமாகிய கடல்தான் உள்ளது. அதைக் கடக்கும் காவலாகிய புணை இல்லை.    

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர். 1165

இன்பஞ் செய்தற்குரிய நட்பின் கண்ணே துன்ப வரவைச் செய்பவர், துன்பஞ் செய்தற்குரிய பகைமையின் கண் என்ன செய்வாரோ?   
 
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதுஅடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.          1166

காமத்தினால் வரும் இன்பம் கடல் போலப் பெரிது. இனி அது பிரிவால் வருத்தும் போது வரும் துன்பம் அக்கடலினும் பெரிது. 
   
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்து யானே உளேன்.         1167

காமமாகிய பெரிய கடலை நீந்தியும் அதற்குக் கரையைக் காணேன். நடு இரவிலும் நான் ஒருத்தியே தனித்து இருக்கின்றேன்.    
 
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா
என்னல்லது இல்லை துணை.          1168

இரவு அன்புடையதே. அது, உலகத்து நிலைபெற்ற உயிர்களை யயல்லாம் தூங்கச் செய்து, என்னை யல்லது வேறு துணை யுடையதாக இல்லை.   

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.      1169

காதலரோடு இன்புற்ற போது குறுகியவாய், அவர் பிரிவாற்றாது துன்புறும் இந்நாளில் நெடியராய்ச் செல்கின்ற இரவுகள், என்னைப் பிரிந்து சென்ற அக் கொடியவரது கொடுமையைக் காட்டிலும், தாம் கொடுமை செய்கின்றன.   
 
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீத்தல மன்னோஎன் கண்.      1170

மனம் போலக் காதலர் உள்ள இடத்திற்கு விரைந்து செல்ல வல்லவையாயின், என் கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய நீரை நீந்தா.     

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...