January 3, 2020

பிரிவு ஆற்றாமை


பிரிவு ஆற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை.          1151

நீ எம்மை விட்டுப் பிரியாமை உண்டாயின் அதை எனக்குச் சொல். அஃதொழியப் பிரிந்து போய் விரைந்து வருதலைச் சொல்லை யாயின் அதனை அப்பொழுது உயிர் வாழ்வார்க்குச் சொல்.    
 
இன்கண் உடைத்துஅவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.          1152

அன்று களவுக் காலத்தில் நம் பின்நின்று அவர் பார்த்த பார்வை புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்ப முடையதாயிருந்தது. இன்று அவர் புணர்ச்சி பிரிவார் என்று அஞ்சும் அச்சத்தினை உடையதா யிருக்கிறது.  
 
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோர் இடத் துண்மையான்.        1153

பிரியேன் என்ற தஞ்சொல்லும், நம் அறிவாற்றாமையும் அறிந்த காதலரிடத்தும், ஒவ்வொரு கால் பிரிவு உண்டாதலால், அவர் முகமலர்ந்து இனிய கூறுதல் பற்றி நம்மிடம் அன்புடையவர் என்று தெளிதல் அரிதாயிருக்கிறது.  
  
அளித்துஅஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.           1154

எதிர்ப்பட்ட அன்றே தலையளி செய்து, ‘நின்னைப் பிரியேன்; அஞ்சாதிருஎன்று கூறியவரே நம்மை விட்டுப் பிரிவாராயின், அவர்க்கின்றி, அவர் தெளிவித்த சொல்லை மெய்யயன்று தெளிந்தவர்க்குக் குற்றமுண்டோ?  
  
ஓம்பின அமைந்தார் பிரிவுஓம்பல் மற்றுஅவர்
நீங்கின் அரிதால் புணர்வு.      1155

என்னுயிரைப் பிரியாமல் காப்பாயாயின், என் உயிரை ஆள அமைந்தவரது பிரிவை தடுப்பாயாக. தடுப்பவரில்லாமல் அவர் பிரிவாராயின் என் உயிர் நீங்கும். நீங்கினால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாகி விடும். என் உயிர் நீங்காதிருக்க அவர் செலவைத் தடுப்பார் யயன்பது கருத்து.   

பிரிவுஉரைக்கும் வன்கண்ண ராயின் அரிதுஅவர்
நல்குவர் என்னும் நசை.         1156

நம் விருப்பத்தை யறிந்த தலைவரே நம் முன்னின்று தம்பிரிவை உணர்த்தும் அருளற்றவராயின், அத் தன்மையார் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை வீணான தாகும்.   

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.    1157

தலைவன் என்னை விட்டுப் பிரிந்ததை, என் முன் கையில் தங்குமிடத்திலிருந்து கழலும் வளையல்களே எனக்கு அறிவிக்குமே; அவனுணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவிக்க வேண்டுமோ?  
   
இன்னாது இனன்இல்லூர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.   1158

மகளிர்க்குத் தங் குறிப்பறியும் தோழியர் இல்லாத அயலூரில் வாழ்தல் துன்பந்தருவதாகும். தங்காதலரைப் பிரிவது அதைக் காட்டிலும் துன்பந் தருவதாகும்.  
   
தொடின்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ.      1159

நெருப்பானது தன்னைத் தொட்டால் சுடுமேயல்லாது, காம நோயைப் போலத் தன்னை விட்டு நீங்கினால் சுடவல்லதோ?     

அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவு ஆற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.  1160

பிரிவு என்னும் பொறுத்தற்கரிய அதற்கு உடன்பட்டு, பிரிவால் வருந்துன்ப நோயை நீக்கி, பிரிந்தால் அப்பிரிவையும் பொறுத்துக் கொண்டு, பின்னும் இருந்து உயிர் வாழும் மகளிர் உலகத்துப் பலராவர்.     

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...