காதல் சிறப்பு உரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர். 1121
மென்மையான மொழியினை உடையவளது வெண்மை யான பல்லில் ஊறிய நீரானது, பாலுடன் தேனைக் கலந்த சுவை போலும். தலைமகன் கூற்று.
உடம்பொடு உயிரிடை என்னமற்ற அன்ன
மடந்தையயாடு எம்மிடை நட்பு. 1122
இம் மடந்தையோடு எம்மிடம் உண்டாகிய நட்பு, உடம்போடு உயிரிடம் உண்டாகிய நட்பு எத்தகையனவோ அத்தகையன.
கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். 1123
என் கண்ணின் கருமணியில் உறையும் பாவாய்! நீ அவ்விடம் விட்டுப் போவாயாக. எம்மால் விரும்பப்பட்ட அழகிய நெற்றியை உடையவளுக்கு இருக்க இடம் இல்லை.
வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல்
அதற்குஅன்னள் நீங்கு மிடத்து. 1124
ஆராய்ந்த அணியை உடையவள் என்னுடன் புணரும் போது என் உயிருக்கு உடம்புடன் கூடி வாழ்வது போல்கின்றாள். என்னை விட்டுப் பிரியும் போது அவ்வுயிருக்கு உடம்பை விட்டு நீங்குதல் போல்கின்றாள். புணர்ந்து நீங்குவோன் சொல்லியது.
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்புஅறியேன்
ஒள்அமர்க் கண்ணாள் குணம். 1125
ஒளி பொருந்திய அமர் செய்யுங் கண்ணினையுடையாள் குணங்களை நான் மறந்தேனாயின் நினைப்பேன். ஆனால், மறத்தலறியேன்! ஆகையால், நினைத்தலையும் அறியேன்.
கண்ணுள்ளில் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர். 1126
எமது காதலர் என் கண்ணினின்றும் வெளியே போக மாட்டார். யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்தவும் மாட்டார். ஆதலால், அவர் காணப்படாத நுண்ணியர்.
கண்ணுள்ளார் காதல வராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து. 1127
காதலர் எங்கண்ணினுள் எப்போதும் இருக்கின்றா ராதலால், அவர் மறைதலை அறிந்து அவ்வளவு காலமும் மையினால் கண்ணும் எழுத மாட்டோம்.
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. 1128
காதலர் எமது நெஞ்சில் எப்போதும் இருக்கின்றாராதலால், அவர் சுடுதலை அறிந்து, உண்ணும் போது சூடுள்ளதாக உண்ணுதற்கு அஞ்சுகிறோம்.
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர். 1129
என் கண் இமைக்குமாயின் அதனள்ளிருக்கின்ற என் காதலர் மறைதலை அறிந்து இமையேன். அவ்வளவிற்கே எனக்குத் துயிலா நோய் செய்து பிரிந்தார். அன்பிலார் என்று பழி கூறும் இவ்வூர்.
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர். 1130
காதலர் எப்போதும் என் நெஞ்சினுள்ளே மகிழ்ந்துறைவர். அதனை யறியாது, இவ்வூர் என்னைப் பிரிந்துறைகின்றார், அன்பில்லாதவர் என்று கூறும்.
No comments:
Post a Comment