January 6, 2020

பொச்சாவாமை


பொச்சாவாமை

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.         531

மிகுந்த உவகைக் களிப்பால் வரும் மறதியானது, அளவிறந்த வெகுளியைக் காட்டினும் தீதாகும்.   

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.   532

நாள்தோறும் உள்ள வறுமை அறிவைக் கெடுத்தல் போல, மறதியை புகழைக் கெடுக்கும்.   

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.       533

மறதி உடையார்க்குப் புகழ் இல்லை. அது உலகத்திலுள்ள எத்தகைய நூலுடையார்க்கும் ஒப்ப முடிந்தது.   

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.     534

அச்சம் உடையவர்க்குக் காவல் இருந்தும் பயனில்லை. அது போல, மறதியுடையார்க்குச் செல்வங்கள் இருந்தும் பயனில்லை.  
  
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்.          535

தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தவன், பின்பு துன்பங்களுற்ற போது காக்கலாகமையின் தன்னுடைய தவறுதலை நினைந்து இரங்குவான்.   

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃதுஒப்பது இல்.      536

மறவாமலிருக்கும் குணம் யாரிடத்தும் எப்போதும் தப்பாமல் வாய்க்குமாயின், அதை ஒப்பது வேறொன்றுமில்லை.   

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.          537

மறவாமையாகிய கருவியால் பாதுகாத்துச் செய்தால், இவை செய்தற்கு அரியனவென்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.  
 
புகழந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.     538

பெரியோரால் புகழ்ந்து கூறப்பட்டவைகளைக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது மறந்தவருக்கு எப்போதும் நன்மை இல்லை.
   
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.            539

தமது மகிழ்ச்சியால் தாம் செருக்குறும் போது, முன்பு அம்மிகு மகிழ்ச்சியாலுண்டாகிய மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.   

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தன்
உள்ளியது உள்ளப் பெறின்.     540

நினைத்த பொருளையே பின்னும் நினைக்கப் பெற்றால், தான் அடைய நினைத்த பொருளை அவ்வாறே அடைதல் எளிதாகும். 
 


No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...