January 6, 2020

தவம்


தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண்  செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.           261

தமக்கு உற்ற நோயைப் பொறுத்தலும், பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமையும் ஆகிய அவ்வளவே தவத்தின் வடிவம்.

தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது.            262

துறவு பூண்டு நோன்பு நோற்றலும் இல்லற வொழுக்கங்களை நன்கு கடைப்பிடித்து ஒழுகியவர்க்கே முடியும். அம்முற் றவம் இல்லாதவர் அதை மேற்கொள்வது வீணாகும்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.            263

துறந்தவர்களுக்கு வேண்டுவன உதவுதலை விரும்பி, இல்வாழ்வார் தவம் செய்தலை மறந்தனர் போலும்.

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். 264

தவஞ்செய்வோர் நினைப்பாராயின், பகைவரைக் கெடுத்தலும் நண்பரை ஆக்கலும் தவத்தால் நடக்கும்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.    265

விரும்பியவற்றை விரும்பியபடியே அடைதலால், செய்கின்ற தவம் மேன்மேலும் முயலப்படும்.

தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு.      266

தவம் செய்பவரே தம் தொழிலையைச் செய்பவராவார். அவரை யயாழிந்தார், ஆசையில் சிக்குண்டு பயனில்லாதவற்றைச் செய்பவரா வார்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.   267

தீயிலிட்டுச் சுடச்சுட மாசற்று ஒளிமிகும் பொன்னைப் போல, தவம் செய்வார்க்குத் துன்பம் வருத்த வருத்தத் தீமை நீங்கி அறிவு மிகும்.

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.           268

தனது உயிரைத்தான்என்று கருதுங் கருத்து நீங்கப் பெற்றவனை, பிற உயிர்களெல்லாம் போற்றும். 

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு.            269

தவ வலிமை கைகூடியவர்க்கு, கூற்றத்தைத் தப்புதலும் உண்டாகும்.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.          270

உலகத்தில் செல்வர்கள் சிலராக வறியவர்கள் பலராதற்குக் காரணம் யாதெனில், தவஞ்செய்வார் சிலரும் தவஞ் செய்யார் பலருமாயிருத்தலே யாகும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...