January 6, 2020

கொல்லாமை


கொல்லாமை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.    321

அறச்செயல் யாதென்றால், ஓருயிரையும் கொல்லாமை யாகும். கொல்லுதல் அறமல்லாத கெட்ட செயல்களின் பயனையயல்லாம் தரும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்துவற்றுள் எல்லாம் தலை.            322

உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துப் பிறகு தானுண்டு பல உயிர்களையும் காத்தல், அறநூலோர் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையாய அறம்.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.         323

ஒப்பின்றித் தனியாக நல்லது கொல்லாமை, அதற்கு அடுத்தப் படியாகப் பொய் பேசாமை நல்லது.

நல்ஆறு எனப்படுவது யாதெனில் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.     324

நல்ல வழி என்று சொல்லப்படுவது எது என்றால், எவ்வகை உயிரையும் கொல்லாமையைக் கருதும் நெறி. ஒருயிரையும் கொல்லக் கருதாமையே நல்வழி.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.        325

தீமை நிலைக்கு அஞ்சி அத் தீமையை விட்டவர்கள் எல்லோரி லும், கொலைப் பழிக்கு அஞ்சிக் கொல்லாமையாகி அறத்தைக் கருது பவன் முதன்மையானவன்.

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிர்உண்ணும் கூற்று. 326

கொல்லாமையாகிய நோன்பை மேற்கொண்டு நடப்பவன் வாழ்நாளின் மேல், உயிரை உண்ணும் கூற்றுச் செல்லாது.

தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை.       327

பிறிதோர் உயிரைக் கொல்லா விடின் தனது உயிர் உடம்பை விட்டுப் போய் விடுமாயினும், தான் வேறொருவன் உயிரை அதன் உடம்பினின்றும் நீக்கும் செயலைச் செய்யாதிருக்கக் கடவன். 

நன்றாகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.  328

வேள்விக் கண் கொன்றால், நன்மையைத் தரும் செல்வம் பெரிது ஆகும் என்று பிறர் கூறினும், ஓர் உயிரைக் கொல்வதால் வரும் செல்வம் பேரறிவினர்க்கு இழிந்ததாகும்.

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.      329

கொலைத் தொழிலையுடையோராக்கிய மக்கள், அக் கொலைத் தொழிலின் கீழ்மையை அறிவாரது உள்ளத்தில் புலைத் தொழிலை யுடையோராகத் தோன்றுவர். 

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.            330

குற்றமான உடம்புடன் வறுமை மிகுந்த இழிந்த வாழ்க்கை உடையவரை, உயிரை உடம்பினின்று நீக்கினவர் என்று கூறுவர் பெரியோர்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...