January 6, 2020

பேதைமை


பேதைமை

பேதைமை என்பதுஒன்று யாதெனின்  ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.   831

அறியாமையயன்று சொல்லப்படுவது ஒன்று எது வென்றால், அது குற்றந்தருவனவற்றைக் கொண்டு நன்மை தருவனவற்றைக் கைவிடுதல். பேதைமை: யாதும் அறியாமை.   

பேதைமை யுள்எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தனகண் செயல்.    832

ஒருவனுக்கு அறியாமைகளிலெல்லாம் மிக்க அறியாமை யாவது, தனக்காகாத ஒழுக்கத்தின் கண் விருப்பங் கொள்ளுதல்.
  
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.  833

நாண வேண்டியவற்றுக்கு நாணாமையும், ஆராய வேண்டி யவற்றை ஆராயாமையும், அன்பின்மையும், போற்ற வேண்டிய வற்றுள் ஒன்றையும் போற்றாமையும் அறிவில்லாதவனுடைய தொழில்களாகும்.  

ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்து தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல்.  834

நூல்களைக் கற்றறிந்தும், அவற்றை பிறர்க்குச் சொல்லியும் தான் அடங்கி நடவாத அறிவில்லாதவனைப் போல, அறிவில்லாதவன் உலகத்தில் இல்லை.  

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.  835

அறிவில்லாதவன், ஏழிடங்களில் தான் புகுந்து அழுந்திக் கிடக்கும் பெருந்துன்பத்தை, ஓரிடத்திலேயே செய்து கொள்ள வல்லவ னாவான். 
 
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.           836

செய்யும் முறையறியாத அறிவில்லாதவன், ஒரு தொழிலை மேற்கொள்வானாயின், அத்தொழிலும் கெடும் தானும் தளை பூணுவான்.
  
எதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.         837

அறிவில்லாதவன் பெரிய செல்வத்தை அடைந்தவிடத்து, அயலார் உண்ணச் சுற்றத்தார் பசித்து நிற்பர்.  

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கைஒன்று உடைமை பெறின்.           838

அறிவில்லாதவன் தன் கையில் ஒரு பொருளை உடைமையாகப் பெற்றால், அது இயற்கையாகவே மயக்க முடையான் ஒருவன் மேலும் கள்ளுண்டு களித்தாற் போன்றது.  

பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதுஒன்று இல்.       839

பிரிய நேர்ந்த போது பிரியும் இருவர்க்கும் தருவதாகிய துன்பம் ஒன்றில்லை. ஆதலால், அறிவிலாதார் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் நட்பானது மிகவும் நல்லது.  

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.       840

சான்றோரது அவையின்கண் அறிவில்லாதவன் புகுதல், கழுவாதக் காலை படுக்கையின் மேல் வைத்தாற் போலும்.  

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...