ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற இவைஇரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். 581
ஒற்றரும் புகழ்மிக்க அறநூலும் ஆகிய இவை இரண்டையும், மன்னவன் தன்னுடைய இரண்டு கண்களாகத் தெளியக் கடவன்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில். 582
எல்லாரிடத்தும் நிகழ்பவை அனைத்தையும் நாடோறும் ஒற்றாரால் விரைவில் அறிதல், அரசனுக்குரிய தொழிலாகும்.
ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல். 583
ஒற்றர்களைக் கொண்டு எல்லோரிடத்தும் நிகழ்வனவற்றை அறிந்துவரச் செய்து அதன் பயனை ஆராயாத அரசன், வெற்றி கொள்ளுதல் இல்லை.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்ந்து ஒற்று. 584
தமது காரியம் செய்வார், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் ஆராய்வானே ஒற்றனாவான்.
கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. 585
பிறர் ஐயப்படாத உருவத்துடன், ஐயப்பட்டு வெகுண்டு நோக்கினால் அந்நோக்குக்கு அஞ்சாது நின்று, எவ்வளவு வருந்தி னாலும் எப்போதும் நெஞ்சில் உள்ளவற்றை வெளிப்படுத்தாமை யால் வல்லவனே ஒற்றனாவான்.
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. 586
துறவுக் கோலமுடையராகி, செல்லுதற்குரிய உள்ளிடங்களி லெல்லாம் புகுந்து ஆராய்ந்து, ஐயுற்றுப் பிடித்து எவ்வளவு துன்பஞ் செய்தாலும் தன்னை இன்னாரென்று வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. 587
பிறர் மறைவாக செய்த செயல்களை அவர்க்கு வேண்டியவர் களால் கேட்டறிய வல்லனாய், அவ்வாறு அறிந்தவைகளை ஐயமின்றித் தீர அறிய வல்லவனே ஒற்றனாவான்.
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588
ஓரொற்றான் ஒற்றி வந்து சொன்ன பொருளையும், வேறொர் ஒற்றனாலும் அறிந்து வரச் செய்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தக்க தேறப் படும். 589
ஓர் ஒற்றன் வேறொரொற்றனை அறியாமல் ஆள வேண்டும். அத்தகைய ஒற்றர் மூவரை ஒன்றை அறிந்துவர வேறு வேறு விட்டால் அம்மூவர் சொல்லும் ஒத்தனவாயின் அது உண்மை யயன்று நம்ப வேண்டும்.
சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 590
ஒற்றனுக்குச் செய்யப்படும் சிறப்பைப் பிறர் அறியச் செய்யக் கூடாது. செய்தால் அவன் ஒற்றனாயதும், அவன் கூறியதுமான மறையைத் தானே வெளிப்படுத்தினவானாவான்.
No comments:
Post a Comment