இரவு அச்சம்
கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். 1061
உள்ளதை மறைக்காமல் மனமுவந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தவரிடமும் இரவாமல் ஒருவன் வறுமையோடிருத்தல், இரந்து அடையும் செல்வத்தினும் கோடி மடங்கு நல்லது.
இரந்தும் உயர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடு உலகுஇயற்றி யான். 1062
இவ்வுலகத்தை உண்டாக்கியவன் மக்கள் முயற்சியால் உயிர் வாழ்தலை விரும்பாது பிறரிடம் சென்று இரந்தும் உயிர் வாழ்தலை விரும்பு வானானால், அக்கொடியோன் இரப்போரைப் போன்று எங்குந் திரிந்து கெடக் கடவன்.
இன்மை இடும்பை இரந்துதீர் வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல். 1063
வறுமைத் துன்பத்தை முயற்சியால் நீக்காமல் இரந்து நீக்குவோம் என்று எண்ணும் வன்மையைப் போல, முரட்டுத் தன்மையுடையது வேறொன்று இல்லை.
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்
காலும் இரவுஒல்லாச் சால்பு. 1064
நுகர்தற்குப் பொருள் இல்லாத போதும் இரத்தற்கு இசையாத நிறைகுணம், அகன்ற நிலமுழுதும் ஒன்று சேரினும் ஒப்பாகாத பெருமையை உடையது.
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல். 1065
முயற்சியால் கிடைத்த பொருளானது தெளிந்த நீர் போலக் காய்ச்சிய கஞ்சியே யானாலும், அதனை உண்ணுவதைக் காட்டிலும் இனிமை வேறொன்றும் இல்லை.
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல். 1066
நீர் வேட்கையால் சாகுந் தருவாயிலுள்ள ஒரு மாட்டிற்குத் தண்ணீர் வேண்டும் என்று கூறும் போதும், அவ்விரத்தலைக் காட்டிலும் ஒருவன் நாவிற்கு இழிந்தது வேறொன்று இல்லை.
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று. 1067
நீங்கள் இரப்பின் தமக்குள்ளததை மறைப்பவரிடம் இராவாதே யுங்கள் என்று, இரப்போர் அனைவரையும் நான் இரக்கின்றேன்.
இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்
பார்தாக்கப் பக்கு விடும். 1068
வறுமைக் கடலை கடக்க அமைத்துக் கொண்ட இரத்தல் என்னும் காவலற்ற கப்பலானது, உள்ளதை இல்லை என்னும் கற்பாறையில் தாக்குமாயின் பிளந்து போகும்.
இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். 1069
உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைந்தால் எம்முள்ளங் கரைந்து உருகா நிற்கும். இனி அவ்வாறு இரந்து நிற்கும் நிலையைக் கண்டும் இல்லை என்றலின் கொடுமையை நினைந்தால் அவ்வுருகும் நிலையும் இல்லாமல் அழிந்து போய்விடும். இரவிலும் கரவு கொடிது.
கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். 1070
உள்ளதை மறைப்பவர் இல்லையயன்று சொன்ன வுடனேயே இரப்பவர்க்கு உயிர் போகின்றது. இனி உள்ளதை மறைப்பவர்க்கு அதற்குப் பின்னும் உயிர் நிற்றலால் முன் இல்லை என்று சொன்ன போது அவ்வுயிர் எந்த இடத்தில் போய் ஒளிந்திருக்குமோ? அறியேன்.
No comments:
Post a Comment