January 6, 2020

நிலையாமை


நிலையாமை

நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவு ஆண்மை கடை.     331

நிலையில்லாதவற்றை நிலையுள்ளவை என்று நினைக்கும் புல்லறிவுடைமை இழிவுடையது.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.   332

பெரிய செல்வம் வருதல், கூத்தாடும் அவையில் உள்ள கூட்டம் போன்றது. அச் செல்வத்தினது போக்கும் அக் கூட்டம் கூத்து முடிந்த வுடன் கலைந்து போவது போன்றது.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.           333

செல்வம் நிலையில்லாத இயல்பினையுடையது. அச் செல்வத்தைப் பெற்றால் நிலையுள்ளனவாகிய அறங்களை அப்பொழுதே செய்க.

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.         334

நாள் என்று காலத்தைப் பிரிக்கும் காலவரையறை போலத் தன்னைக் காட்டி, அறுக்கும் வாளினது வாயினிடத்தது உடம்பு. உணர்வார்ப் பெறின்:உணர்வைப் பெற்றால்.-

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.   335

பேச முடியாதவாறு நாவை அடக்கி விக்கல் மேலே எழுவதற்கு முன்னே, நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்உலகு.         336

ஒருவன் நேற்று இருந்தான். அவனே இன்று இல்லை என்னும் பெருமையை இவ்வுலகம் உடையது. உலக வாழ்வு நிலையற்றது.

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.    337

ஒரு பொழுதேனும் உயிருடன் கூடியிருத்தலை அறிய மாட்டார். அப்படியிருந்தும், கோடியளவின்றி அதற்கு மேலும் பல எண்ணங் களை எண்ணுவர் அறிவில்லாதார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.   338

உடம்புடன் உயிருக்குள்ள நட்பானது, முட்டை தனித்துக் கிடக்க அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு தக்க பருவம் வந்ததும் பறந்து போவதைப் போன்றது.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.      339

சாவு தூங்குவது போலும். பிறப்பு தூங்கி விழிப்பது போலும்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.       340

உடம்பினுள்ளே ஒதுக்குக் குடியாக இருந்த உயிர்க்கு, எப்போதும் இருப்பதோர் இல் அமையவில்லை போலும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...