சொல்வன்மை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. 641
நாநலம் எனச் சிறப்பித்துச் சொல்லப்படும் நலம் ஒருவனுக்கு உடைமையாகும். அந்நலம் பிற எல்லா நலங்களினுள்ளும் அடங்குவ தன்று. அவற்றின் மிக்கதாகும்.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. 642
வாழ்வும் தாழ்வும் அச் சொல்லினால் வருவதால், சொல்லின்கண் சோர்வுபடுதல் தம்மிடம் இல்லாமல் போற்றிக் காக்க வேண்டும்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். 643
கேட்டவர் மனத்தைக் கவர்ந்து கொள்ளும் தன்மையுடையன வாய், நேரில் கேளாதவரும் இனி எப்போது கேட்போம் என்று விரும்பும்படி பேசுவதே சொல்லாகும்.
திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊங்கு இல். 644
சொல்லை வகையறிந்து சொல்லுக, அப்படிச் சொல்லு தற்கு மேற்பட்ட அறமும் பொருளும் இல்லை.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. 645
தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லக் கூடிய வேறொரு சொல் இல்லாமையை அறிந்து, பிறகு அச் சொல்லைச் சொல்லுக.
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். 646
தாம் சொல்லும்போது பிறர் விரும்புமாறு சொல்லி, பிறர் சொல்லும் போத அவர்களது சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல், சிறந்த குணங்களுடன் குற்றமற்றாரது கொள்கை யாகும்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647
தான் எண்ணியதைப் பிறர்க்குச் சொல்லுதலில் வல்லவனாகி, அச் சொல்வதில் சோர்வில்லாதவனாய், யார்க்கும் அஞ்சாத வனாயின், அவனைச் சொற்போரின்கண் வெல்லுதல் எவராலும் முடியாது.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648
சொல்லப்படுவனவற்றை
வரிசைப்படுத்தி இனிதாகச் சொல்லுதலில் வல்லாரைப் பெற்றால், உலகத்தார் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்வர்.
பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். 649
குற்றமற்றவனாகச் சில சொற்களைத் தெளிவாகச் சொல்ல அறியாதவர், பல சொற்களைச் சொல்ல விரும்புவர், சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.
இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துரையா தார். 650
தாம் கற்றவற்றைப் பிறர் அறியுமாறு விளக்கமாகச் சொல்ல மாட்டாதவர், பூங்கொத்தில் மலர்ந்தும் மணக்காத பூவை ஒப்பர்.
No comments:
Post a Comment