January 6, 2020

வாய்மை


வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். 291

உண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதென்றால்,  பிறருக்குத் தீங்கு சிறிதும் உண்டாகாத சொற்களைச் சொல்லுதல்.

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.        292

குற்றம் நீங்கிய நன்மையைத் தருமாயின், பொய்ம்மைச் சொற்களும் உண்மைச் சொற்களாகும். 

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.            293

ஒருவன் தன்நெஞ்சு அறிந்ததொன்றை மறைத்துப் பொய் சொல்லாதிருக்க. பொய் சொன்னபின் அதை அறிந்த தனது நெஞ்சமே தன்னை வருத்தும்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். 294

மனமறிய ஒருவன் பொய்பேசாது இருப்பானானால், அவன் உலகத்தார் எல்லாருடைய மனத்தினும் இருப்பான்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.     295

ஒருவன் தன் மனமார உண்மையைச் சொல்வானாயின், அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையவன் ஆவான்.

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.  296

பொய் சொல்லாமையைப் போன்ற புகழ் வேறு இல்லை. பொய் பேசாமை அவனுக்கு எல்லா அறங்களையும் ஒழியாமல் தரும். 

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.      297

ஒருவன் எப்போதும் பொய் சொல்லாதிருப்பின், அவன் வேறு அறங்கள் செய்யாமை நல்லது.

புறந்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும். 298

உடம்பு தூய்தாதல் தண்ணீரால் உண்டாகும். அது போல,  மனம் தூய்தாதல் ஒருவன் சொல்லும் உண்மையால் காணப்படும்.

எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. 299

புறத்திருளைப் போக்கும் ஞாயிறு, திங்கள், தீ முதலிய விளக்கு களெல்லாம் விளக்கல்ல. பெரியோர்களுக்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும். அறியாமை உண்மையே மன வொளியாகும். 

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.        300

நாம் உண்மையாகக் கண்ட அறங்களுள், உண்மை சொல்லு தனினும் நல்ல பிற அறங்கள் வேறு எவையும் இல்லை. உண்மை எல்லா அறங்களிலும் சிறந்த அறமாகும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...