January 6, 2020

பெண்வழிச் சேறல்


பெண்வழிச் சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.   901

மனைவியை விரும்பி அவள் ஏவல் கேட்டு நடப்பவர் சிறந்த இல்லறப் பயனை அடைய மாட்டார்கள். இனிப் பொருள் செய்தலை முயலுபவர் விரும்பாத பொருளும் அதுவே.

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.            902

அறத்தையும் பொருளையும் போற்றாது பெண்மையை விரும்பு வோனது செல்வமானது, மிகுந்ததோர் வெட்கம் உலகத்தில் நிற்கும் படியான வெட்கத்தைக் கொடுக்கும்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.      903

மனைவியிடத்து தாழ்ந்து நடக்கும் தகுதியின்மை எப்போதும் நல்லோர்களிடையில் பேசும்போது வெட்கத்தைக் கொடுக்கும்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறுஎய்தல் இன்று.       904

மனைவியைக் கண்டு அஞ்சும் புகழில்லாதவன் ஒரு வினையை மேற்கொள்ளினும், அதனால் அவன் பெருமை அடைவதில்லை.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.     905

மனைவியை அஞ்சுபவன், நல்லோர்க்கு நல்லவை செய்தற்கு எப்போதும் அஞ்சுவான்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமைஆர்தோள் அஞ்சு பவர்.            906

மனைவியின் மூங்கில் போன்ற தோள்களுக்கு அஞ்சுபவர், தேவர்கள் போல வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவராவார்.

பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் நாண்உடைப்
பெண்ணே பெருமை உடைத்து.        907

மனைவியின் ஏவல் தொழிலைச் செய்து நடக்கும் ஆண் மகனது ஆண்மையைக் காட்டிலும், நாணமுடைய பெண் மகளது பெண்மையே பெருமையுடையது.

நட்டார் குறைமுடியார் நன்று ஆற்றார் நல்நுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.         908

நல்ல நெற்றியையுடைய மனைவி விரும்பியவாறு நடப்பவர், நண்பர்களது குறையை முடிக்க மாட்டார். நல்லறத்தையும் செய்ய மாட்டார்.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.      909

அறச் செயலும் சிறந்த பொருட் செயலும், இன்பச் செயலும் மனைவியின் ஏவலைச் செய்பவர்களிடம் இல்லை.

எண்சேர்ந்த நெஞ்சத் திடன்உடையார்க்கு  எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.    910

எண்ணம் சேர்ந்த நெஞ்சத்தை விரிவாக உடையவர்க்கு மனைவியைச் சேர்வதால் உண்டாகும் அறிவின்மை எப்போதும் இல்லை.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...