இடனறிதல்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. 491
பகைவரை வளைத்துக் கொள்ளுதற்கேற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல், யாதொரு செயலையும் தொடங்காதிருக்க வேண்டும். எள்ளற்க: பகைவரைச் சிறியரென்று இகழாதிருக்க வேண்டும்.
முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம் பலவும் தரும். 492
மிக்க வலிமையுடையவர்ககும், அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். 493
பகைவரிடம் வினை செய்யும் இடத்தை அறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின், வலியில்லாதாரும் வலிமை பெற்று வெல்வர்.
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின். 494
தாம் வினைசெய்தற்கேற்ற இடத்தை யறிந்து மேற் சென்றவர்கள், அவ்விடத்தைப் பொருந்தி வினை செய்வாராயின், வெல்வதற்கு எண்ணியிருந்த பகைவர் அவ்வெண்ணத்தை இழப்பர்.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. 495
முதலை ஆழமுள்ள நீரில் பிற உயிர்களை வெல்லும். நீரினின்றும் வெளியேறினால் பிற உயிர்கள் அம் முதலையை வெல்லும்.
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து. 496
வலிய உருளையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓட மாட்டா. கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓட மாட்டா.
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். 497
வினை செய்யும் வழிகளை யயல்லாம் குறையாமல் எண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்தால், அச் செயலுக்குத் தம் மனவுறுதி யல்லாமல் வேறு துணை வேண்டுவதில்லை.
சிறுபடையான் செல்இடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். 498
பெரிய சேனையை யுடையவன் சிறிய சேçனையையுடையவனை வெல்லக் கருதி அவனுக்குத் தகுதியான இடத்தைச் சேர்ந்தால், அச்சிறுபடையோனால் தன் பெருமையை இழப்பான்.
சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499
அழித்தற்கரிய அரணும் பெருமையும் இல்லாதவராயினும், பகையரசரை அவர் உறைகின்ற இடத்தில் சென்று வெல்லுதல் அரிது.
கால்ஆழ் களரில் நரிஅடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. 500
பாகர்க்கு அடங்காதவையும், வேல் தைத்த முகத்தையுடையவை வுயமாகிய ஆண் யானைகளை, கால்கள் புதையும் சேற்று நிலத்தில் பட்ட போது நரிகள் கொல்லும்.
No comments:
Post a Comment