January 6, 2020

இடுக்கண் அழியாமை


இடுக்கண் அழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.     621

துன்பம் வரும்போது மனமகிழ்க. அத் துன்பத்தை மேன்மேலும் எதிர்க்க வல்லது அம் மகிழ்ச்சி போன்றது வேறு இல்லை.   

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.   622

வெள்ளம் போன்ற மிகுந்த துன்பங்களெல்லாம், அறிவு டையவன் நெஞ்சினால் அவற்றை மாறுபட நினைத்தவுடன் கெடும்.   
 
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.  623

துன்பத்திற்கு வருந்தாதவர், துன்பத்திற்குத் துன்பத்தை உண்டாக்கு வர். துன்பத்திற்கு வருந்தாதவர் துன்பங் கெடும்.    

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.      624

நடை உண்டான இடங்களிலெல்லாம் தளர்வின்றி வண்டியை இழுத்துச் செல்லும் எருது போலத் தளர்வின்றித் தொழில் செய்ய வல்லவனை, உற்ற துன்பம் தானே துன்பப்படுதலை உடையது.   

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.    625

இடைவிடாது மேன்மேலும் வந்தாலும், மனவுறுதியை விடாதவனை உற்ற துன்பங்கள் துன்பப்பட்டுப் போகும்.   

அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்.            626

செல்வம் வந்து குவிந்த காலத்தில் அதைப்பெற்றேம்என்று போற்றி வைத்தலை அறியாதவர். வறுமைக் காலத்தில்பொருள் அற்றேம்என்று துன்பப்படுவார்களோ? பட மாட்டார்.   

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கெள்ளாதாம் மேல்.       627

உடம்பு துன்பமாகிய வாளுக்கு இலக்கு என்று அறிந்து, துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் அறிவுடையோர்.     

இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன்.            628

இன்பத்தை விரும்பாமல் துன்பத்தை இயல்பென்று அறிபவன், எப்போதும் துன்பமடைய மாட்டான்.   

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.            629

இன்பம் வந்த போது அவ்வின்பத்தை விரும்பாதவன், துன்பம் வந்த போதும் அத் துன்பத்தால் துன்புறான்.  
  
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.   630

ஒருவன் துன்பத்தை இன்பமாகக் கொள்வானாயின், அது தன் பகைவரும் விரும்பத்தக்க சிறப்பாகும்.    

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...