January 6, 2020

வலி அறிதல்


வலி அறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.      471

தான் செய்யக் கருதிய வினையின் வலியையும், தனது வலியையும், தனது பகைவனது வலியையும், தனக்கும் தன் பகைவனுக்கும் துணை வருவோர்களது வலியையும் ஆராய்ந்து பார்த்துத் தன் வலி மிகு மாயின் அச் செயலைச் செய்க.  

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.    472

ஒரு தொழிலை முடிக்குந் தன் திறத்தையும் அதற்கறிய வேண்டிய வலியையும் அறிந்து, எப்பொழுதும் தம் கருத்தை அவ்வினையி டத்தே வைத்துப் பகைவர் மேல் செல்லும் அரசர்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை. எளிதில் வெல்வர். 

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.  473

தம்முடைய வலியினளவை அறியாது, மனவெழுச்சியால் ஒரு வினையைத் தொடங்கி, வினை முடிவதன் முன்னே கெட்டவர் பலராவர்.
 
அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.           474

அயலாரோடு பொருந்தி ஒழுகாதவனாகி, தன் வலியின் அளவை அறியாது, தன்னைப் பெரிதாக எண்ணிப் பிறரைப் பகைத்தவன் விரைவில் கெடுவான்.
 
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.            475

மிகவும் மெலியான மயிலிறகை ஏற்றிய வண்டியும் அச்சு முறியப் பெறும்,  அம்மயிலிறகை மிகவும் மிகுதியாக ஏற்றினால்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்.  476

மரக்கிளையின் நுனியில் ஏறி நின்றவர் அவ்வளவைக் கடந்து மேலும் ஏற முயல்வாராயின், அம் முயற்சி அவர்களது உயிர்க்கு முடிவாகி விடும். 

ஆற்றின் அளவுஅறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.         477

தமக்குள்ள பொருளின் அளவை யறிந்து அதற்கேற்பக் கொடுக்க வேண்டிய வழிகளில் கொடுக்க, அச் செய்கை பொருளை ஈட்டி வழங்கும் வழியாகும்.
 
ஆகாறு அளவஇட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.         478

பொருள் வரும் வழி சிறியதாயிருப்பினும் கெடுதியில்லை. அப்பொருள் போகும் வழியின் அளவு அதனிலும் விரியாதாயின். 

அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.         479

தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து அதற்கேற்ப வாழாதவன் வாழ்க்கையானது, உள்ளது போலத் தோன்றி, உண்மை யாக இல்லையாய், பின்பு அத் தோற்றமும் இல்லாமல் கெட்டு விடும்.

உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும். 480

தனக்குள்ள பொருளின் அளவை எண்ணிப் பாராத கொடை யால், ஒருவனது பொருளின் அளவு விரைவாகக் கெட்டுவிடும்.


No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...