இறைமாட்சி
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. 381
இவ் ஆறு உறுப்புகளையும் உடையவன், அரசர்களுள் அரியேறு (சிங்கம்) போல்வான்.
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. 382
மனவுறுதி, கொடை, அறிவு, முயற்சி என்னும் இந்நான்கு குணமும் குறையாமல் அமைந்திருத்தல், அரசனுக்கு இயல்பாகும். எஞ்சாமை: எப்போதும் குறையாமை.
தூங்காமை கல்வி துணிவுஉடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. 383
நிலத்தை ஆளும் அரசனுக்கு, சோம்பலின்மை, கல்வி, ஆண்மை ஆகிய இம் மூன்றும் எப்பொழுதும் நீங்காமலிருக்க வேண்டும்.
அறன்இழுக்காது அல்லவை நீங்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு. 384
அறமல்லாத குற்றங்களை நீக்கி, வீரத்தினின்று தவறாத மானத்தை வுடையவனே அரசனாவான்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு. 385
பொருள் வரும் வழிகளை மேன்மேல் உண்டாக்கலும், வந்த பொருள்களைச் சேர்த்து வைத்தலும், அவற்றைக் காப்பாற்றுதலும், அப்படிக் காப்பாற்றியவற்றை நாட்டு நலத்தில் செலவிடுதலும் வல்லவனே அரசனாவான்.
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். 386
காண்பதற்கு எளியனாய், எவரிடத்தும் கடுஞ்சொல் சொல்லாத வனாகில், அம்மன்னனை உலகத்தார் உயர்த்திக் கூறுவர்.
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் உலகு. 387
இனிய சொல்லுடனே வேண்டியதைக் கொடுத்துக் காக்கக் கூடிய அரசனுக்கு, இவ்வுலகம் தன் ஏவலினாலே தான் எண்ணியபடி நடக்கும்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும். 388
குற்றஞ்செய்தாரைத்
தண்டித்து முறை செய்து, நாட்டு மக்களைக் காக்கும் அரசன், மக்களுக்குத் தலைவன் என்று கருதப்படுவான்.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடைய வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389
காது வெறுக்கும்படி பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் குணமுடைய அரசனது குடையின் கீழ் உலகம் தங்கும்.
கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி. 390
வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்தல், முகமலர்ந்து இனிய கூறல், செங்கோன்மை, குடிகளைப் பாதுகாத்தல் என்னும் நான்கை யும் உடையவன், அரசர்களுக்கெல்லாம்
விளக்காவான்.
No comments:
Post a Comment