கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து. 551
பொருளை விரும்பிக் குடிகளை வருத்தும் தொழிலை மேற் கொண்டு அறமல்லாதவற்றைச் செய்து நாடாளும் அரசன், பகைமை பற்றிக் கொல்லுந் தொழிலை மேற்கொண்டொழுகு வாரினும் கொடியனாவான்.
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. 552
கொடுங்கோலரசன் குடிகளிடம் இரத்தல், வழியில் வேலொடு நின்ற கள்வன், வழிச்செல்வோனைப் பார்த்துக் கையிலுள்ள பொருளைக் கொடு என்று கேட்பது போலும்.
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும். 553
நாள்தோறும் தன்நாட்டில் உண்டாகும் தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டை இழப்பான்.
கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. 554
பின் விளைவதை எண்ணாமல் முறை தவறி ஆட்சி செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒருங்கு இழப்பான்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைக் தேய்க்கும் படை. 555
குடிகள் துன்பமுற்று அதனைக் பொறுக்க மாட்டாமல் அழுத கண்ணீர் அன்றோ, அரசனது செல்வத்தைக் குறைக்கும் கருவியாகும்.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. 556
அரசர்க்கு நிலைத்திருப்பது செங்கோன்மையாகும். அச்செங் கோன்மை இல்லாவிட்டால் அவர்களுக்குப் புகழ் நிலையாவாம். ஒளி-புகழ்.
துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு. 557
தன்னாட்டில் வாழும் மக்களுக்கு அந்நாடாள் வேந்தனது அருள் இன்மையானது, உலகத்திற்கு மழையின்மை எத்தகையதோ அத்தகைய தாகும்.
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். 558
முறை செய்யாத அரசனது கொடுங்கோலின் கீழ் வாழ்வது, செல்வமுடைமை, வறுமையைக் காட்டிலும் துன்பந் தருவதாகும்.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். 559
மன்னவன் முறை தவறச் செய்வானாயின், பருவ மழை இல்லையாகும்படி மேகம் மழை பெய்யாது.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560
அரசன் முறை செய்யானாயின், அவன் நாட்டின்கண் வாழும் மக்களது முயற்சியால் ஆகும் பயன் குறையப்பெறும். முதன்çமான தொழிலுடையோர் தம் தொழிலுக்குரிய அறிவை மறந்து விடுவர்.
No comments:
Post a Comment