January 6, 2020

வினைசெயல் வகை


வினைசெயல் வகை

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.     671

ஆராய்ச்சியின் முடிவு தெளிவான உறுதியைப் பெறுவ தாகும். அவ்வாறு உறுதி பெற்ற பின் காரியத்தைச் செய்யாமல் காலந் தாழ்த்துவது குற்றமாகும்.    

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.    672

நீட்டித்துச் செய்ய வேண்டிய செயல்களை நீட்டித்துச் செய்க. நீட்டியாது செய்யும் செயல்களை விரைவில் செய்க.    

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.     673

இயலும் இடத்திலெல்லாம் வினை செய்தல் நல்லது. இயலாத இடத்து அது முடியும் இடம் பார்த்துச் செய்க.    
 
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயயச்சம் போலத் தெறும்.     674

செய்யத் தொடங்கிய வினையும், களையத் தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது மிச்சமும், ஆராயுங்கால் அவித்த பின் அவியாதிருந்த நெருப்பின் குறையைப் போல வளர்ந்து கெடுக்கும். 
   
பொருள் கருவிகாலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.    675

வினை செய்யும் போது, பொருளும் கருவியும் காலமும் வினையும் இடமும் ஆகிய இவ்வைந்தையும், ஐயந்தீர எண்ணிச் செய்ய வேண்டும்.    

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.            676

வினை செய்யுங்கால் அது முடிதற்கு வேண்டிய முயற்சியும், அவ்வினை முடிவிற்கு வரும் இடையூறும், அவ்விடையுறு நீங்கி வினை முடிந்தால் எய்தும் பெரும் பயனும், எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும்.    

செய்வினை செய்வான செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்.      677

செய்யப்படும் வினையைச் செய்யத் தொடங்கினவன் செய்யும் முறையாவது, அத்தகைய வினை செய்தவன் பழக்கத்தைத் தானறிந்து செய்வதேயாகும். 
   
வினையான் வினைஆக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.     678

செய்கின்ற வினையினாலே மற்றோர் வினையை முடித்துக் கொள்க. அவ்வாறு செய்தல், வெறி நீரால் நனைந்த கன்னத்தினை யுடைய யானையாலே மற்றொரு யானையைக் கட்டியது போலாகும்.  
  
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.   679

நண்பருக்கு நல்லவை செய்வதைக் காட்டிலும், பகைவர்க்குப் பகைவரை நண்பராக்கிக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.  
  
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.         680

ஆளுமிடம் சிறிதாக உள்ளவர், தம்மினும் வலியார் எதிர்த்த போது, தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி, தாம் எண்ணியபடி உடன்பாடு செய்து கொள்ள இசைவாரானால், அவ்வலியாரைப் பணிந்து கொள்வர்.     

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...