அவைஅறிதல்
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர். 711
சொல்லின் தொகையை அறிந்த தூயவர், அவையின் தன்மையை அறிந்து, அதற்கேற்றவாறு ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். 712
சொற்களின் நடை தெரிந்த நல்லோர், அவையின் செவ்வியை ஆராய்ந்தறிந்து மிகவும் தெளிந்து சொல்லக்கடவர்.
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். 713
அவையின் தன்மையை அறியாது ஒன்று சொல்லத் தொடங் குவோர், சொல்லும் வகையும் அறியார், கற்றுவல்ல கல்வியும் அவர்க் கில்லை.
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். 714
அறிவுடையார் கூடிய அவையில் தாமும் அறிவுடையராக வேண்டும், அறிவிலார் அவையில் வெண்மையான சுண்ணாம்பின் நிறத்தைக் கொள்ள வேண்டும்.
நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. 715
தம்மினும் சிறந்த அறிஞர் கூடிய அவையில் அவருக்கு முன்னதாகப் பேசாத அடக்கமானது, நற்குணங்கள் என்று சொல்லப் பட்ட எல்லாவற்றிலும் மிக நல்ல குணமாகும்.
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. 716
விரிந்த நூற்பொருளைக் கேட்டு அறியவல்லவர் முன்னிலையில் குற்ற முண்டாகும்படி சொல்லுதல், நல்ல வழியில் நின்றவன் அதனின்றும் தவறியது போலும்.
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடுஅறச்
சொல்தெரிதல் வல்லா ரகத்து. 717
குற்றமறச் சொற்களை அறிதலில் வல்லாரது அவையில் சொன்னால், கற்றறிந்தவருடைய கல்வியானது விளங்கும்.
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. 718
தாமே உணரவல்ல அறிவடையார் முன்னிலையில் ஒன்றைச் சொல்லுதல்,
தானாக வளரும் பயிரையுடைய பாத்தியில் நீரை ஊற்றினால் போலும். பயிர் வளர்வது போல சொல்வோன் அறிவு வளரு மென்பதாகும்.
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார். 719
நல்லாரவையில் நல்ல பொருள்களை அவர் மனங் கொள்ளம்படி சொல்ல வந்தவர், புல்லியாரவையில் மறந்தும் அவற்றைச் சொல்லற்க.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல். 720
நல்லவர், தம் இனத்தவர் அல்லாதவர் முன் ஒன்றையும் சொல் லுதல் கூடாது. சொல்லின், அது சலதாரையில் ஊற்றிய அமிழ்தம் போலும்.
No comments:
Post a Comment