January 6, 2020

வான் சிறப்பு


வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.            11

மழையினால் உலகத்து உயிர்கள் நிலைப்பெற்று வருவதால்,  அம்மழையே உலகத்துயிர்களுக்குச் சாவா மருந்து என்று உணர வேண்டும்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.   12

உண்பவர்களுக்கு நல்ல உணவை உண்டாக்கி, தண்ணீராய், உண்பவர்களுக்குத் தானும் உணவாவதும் மழையே ஆகும்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி.          13

மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது போனால், விரிந்த கடலால் சூழப்பட்ட பெரிய உலகத்தின்கண்,  பசி நிலைபெற்று உயிர்களை வருத்தும்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.       14

மழை என்னும் வருவாயின் வளப்பம் குறையுமானால், உழவர் ஏரினால் நிலத்தை உழ மாட்டார்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்  றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.           15

நிலத்தில் வாழ்பவரைப் பெய்யாது கெடுப்பதும், கெட்டவர்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்ததைப் போலவே வாழ்விப்பதும் ஆகிய இவையயல்லாம் செய்யவல்லது மழை.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.            16

முகிலில் இருந்து மழைத்துளி விழுந்தாலன்றி, அவ்விடத்தே பசும்புல்லின் தலையைக் காண்பது அரிது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின்.         17

முகில் மின்னி மழை பெய்யாவிட்டால் பெரிய கடலும் தன் இயல்பு குறையும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.          18

மழை பெய்யாதாயின், இங்கு வரும் தேவர்களுக்கும் சிறப்பாக வழிபாடு நடவாது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.     19

மழை பெய்யாது விட்டால், இப் பரந்த உலகத்தில், தானமும் தவமுமாகிய இரண்டும் நடைபெறா.

நீர் இன்று அமையாது உலகுஎனின்  யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.   20

எத்தகையோர்க்கும் தண்ணீரில்லாமல் உலகியல் நடை பெறாதாயின், அத்தண்ணீரின் வருகையும் மழையில்லாமல் உண்டாகாது.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...