January 6, 2020

சான்றாண்மை


சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.         981

நமக்குத் தகுவது இதுவென்றறிந்து எல்லா நற்குணங் களையும் ஆளுந் தன்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு, நல்ல குணங் களெல்லாம் இயல்பாக உள்ளனவென்று கூறுவர் அறிவுடையோர்.   

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.       982

சான்றோர்களது நலமாவது, நற்குணங்களாகிய நலமே யாகும். குணநலமொழிந்த உறுப்புக்களலாகிய நலம் ஒரு நலத்தினும் உள்ள தன்று.
 
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையயாடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.  983

அன்பும் நாணும் ஒப்புரவும் கண்ணோட்டமும் உண்மை யும் என்ற ஐந்தும், சால்பு என்னும் கூரையைத் தாங்கும் தூண்களாகும். 

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.     984

நோன்பு நோற்றல் ஓருயிரையும் கொல்லாத அறத்தின் பாலது. அதுபோல, சால்பு பிறர் குற்றங்களைச் சொல்லாத குணத்தின் பாலது. 

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.     985

ஒரு தொழிலைச் செய்து முடிப்போரது வல்லமையாவது அத்தொழிலுக்குத் துணை செய்வாரிடத்தில் பணிவாக நடந்து கொள்ளுதல். அதுவே சால்புடையவர் தம் பகைவரை ஒழிக்கும் கருவியாகும். 
 
சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்வி
துறைஅல்லார் கண்ணும் கொளல்.            986

சால்பாகிய பொன்னின் மாற்றை அறிதற்கு உரைகல் எது வென்றால், அது தன்னைக் காட்டிலும் வலியவரிடம் கொள்ளும் தோல்வியை மெலியவரிடமும் கொள்ளுதல். 

இன்னாசெய தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.         987

தமக்குத் தீமை செய்தார்க்கும் நன்மையே செய்யாராயின், அவரது சால்பு வேறு என்ன பயனையுடையது. 

இன்னா ஒருவற்கு இளிவன்று சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின். 988

சால்பு என்னும் உறுதி உண்டாகப் பெற்றால், ஒருவனுக்கு வறுமையானது இகழ்ச்சியாகாது. 

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி என்ப்படு வார்.        989

சான்றாண்மையாகிய கடலுக்குக் கரை என்று சொல்லப் படுவர், ஏனைய கடல்கள் கரை புரளும்படி காலம் மாறுபட்டாலும் தாம் மாறுபடார். 

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. 990

சான்றோர் தம் தன்மை குன்றுவாராயின், பெரிய நிலவுலகமும் தன் சுமையைத் தாங்காததாகி விடும். 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...