வரைவின் மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். 911
ஒருவனை அன்பு பற்றி விரும்பாது, பொருளை பற்றி விரும்பும், ஆய்ந்த வளையல்களை அணிந்த மகளிரது இனிய சொற்கள், பின்பு கேட்டை உண்டாக்கும்.
பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். 912
தமக்கு உண்டாகும் பயனை அளந்தறிந்து, தமது நற்குணங்களைக் கூறும் நற்குணமில்லாத மகளிரது, இன்பத்தை அளந்து பார்த்து அவர்களைப் பொருந்தாது விடுக.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று. 913
கொடுப்போரை விரும்பாது, பொருளையே விரும்பும்
பொருள் மகளிரது ஒருவனை முயங்கும் பொய் முயக்கமானது, கூலிக்குப் பிணமெடுப்பார் இருட்டறையில் கிடந்த தாம் முன் கண்டறி யாததும் தமக்குச் சொந்த மல்லாததுமான ஒர் அயற்பிணத்தைத் தழுவி எடுத்தாற் போலும்.
பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறவி னவர். 914
இன்பமாகிய பொருளை விட்டுப் பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புன்மையாகிய இன்பத்தை, அருளாகிய பொருளை ஆராயும் அறிவுடையோர் தீண்டார்.
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். 915
இயற்கையாகிய அறிவு நலத்தினால் மாட்சிமைப்பட்ட செயற்கை யறிவுடையோர், பொருள் கொடுப்போர்க்கெல்லாம் பொதுவாகிய நலத்தினையுடைய மகளிரது புன்மையான இன்பத்தைத் தீண்டார்.
தந்நலம் பார்ப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். 916
ஆடல், பாடல் அழகு என்னும் தகைமையால் களித்துத் தம் புன்மையாகிய இன்பத்தை விலை கொடுப்பார் யாவரிடத்தும் பரப்பும் விலை மகளிரது தோளினை, தமது புகழை உலகத்தில் பரப்பும் பெரியோர் தீண்டார்.
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள். 917
இன்பமல்லாத பிறவாகிய பொருளை நெஞ்சில் விரும்பி அன்பு டையார் போல் நடித்துப் புணரும் மகளிரது தோளை, நிறைந்த நெஞ்சம் இல்லாதவர் தோய்வர்.
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப
மாய மகளிர் முயக்கு. 918
வடிவு சொல் செயல்களால் வஞ்சிக்கும் மகளிர் முயக்கம், ஆராய்ந்தறியும் அறிவில்லாதவர்க்கு அணங்கின் முயக்கம் என்பர் அறிவுடையோர்.
வரைவுஇலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. 919
வரையறையில்லாது விலை கொடுப்போர் யாவரையும் கூடும் மாட்சிமைப்பட்ட அணிகளை உடைய மகளிரது மெல்லிய தோளானது, அறிவில்லாத கீழ் மக்கள் படும் பெருந்துன்பமாகும். 255- ஆம் குறளுரை பார்க்க.
இதுமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920
பொதுமகளிரும் கள்ளும் சூதும் ஆகிய இம்மூன்றும் திருவினால் நீக்கப்பட்டவர்களுக்கு நட்பாம்.
No comments:
Post a Comment