பொழுதுகண்டு இரங்கல்
மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ வாழி பொழுது. 1221
பொழுதே! நீ மாலையோ எனில், அல்லை. மணந்தவர்களின் உயிரை உண்ணும் கடலாவாய். நீ வாழ்வாயாக.
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. 1222
மயங்கிய மாலைப்பொழுதே நீ வாழ்வாயாக! நீயும் எம்மைப் போல ஒளியிழந்துள்ளாய். உனது துணையும் எமது துணை போல இரக்கமில்லாததோ?
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். 1223
காதலர் எம்மைக் கூடிய நாளெல்லாம் எம்முன் நடுக்கமெய்திப் பசந்து வந்த மாலை, இந் நாள் நான் இறந்துபடுமாறு துன்பம் மிகும்படி வளருகின்றது.
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். 1224
காதலர் உள்ள போதெல்லாம் என் உயிர் தளிர்க்க வந்த மாலைப் பொழுது, காதலர் இல்லாத பொழுது, கொலைக் களத்தின்கண் கொலைஞர் வருவது போல வருகின்றது.
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. 1225
காலையும் மாலையும் அவர் கூடிய நாட்போலாது இன்று வேறுபட்டு வருகின்றன. நான் காலைப் பொழுதுக்குச் செய்த நன்மை யாது? நான் மாலைப் பொழுதுக்குச் செய்த தீமை யாது?
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். 1226
காதலர் என்னை விட்டுப் பிரியாதிருந்த போது, மாலைப் பொழுது எனக்குத் துன்பஞ் செய்தலை அறியப் பெற்றிலேன்.
காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். 1227
இக்காம நோயாகிய பூ, காலைப் பொழுதில் அரும்பி, பகற்பொழு தெல்லாம் பேரரும்பாக முதிர்ந்து, மாலைப் பொழுதில் மலரும்.
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழால்போலும் கொல்லும் படை. 1228
முன்னெல்லாம் இனிதாய இடையன் புல்லாங்குழல், இப்போது நெருப்புப் போலச் சுடுவதாகிய மாலைப் பொழுதுக்குத் தூதுமாகி, என்னைக் கொல்லும் கொலைக் கருவியும் ஆயிற்று.
இதுவுமது, தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது என்பதாம்.
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. 1229
கண்டார் மதிமயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது,
இவ்வூரார் அனைவரும் மயங்கித் துன்பப் படுவர். இதுவுமது.
பொருண்மாலை யாளரை உள்ளி மருண்மாலை
மாயும்என் மாயா உயிர். 1230
பிரிவைப் பொறுத்து இறந்து படாத என் உயிர், பொருள் ஈட்டுதலையே இயல்பாக உடைய தலைவரை நினைந்து, மயக்கந் தரும் மாலைப் பொழுதில் மாய்கின்றது.
No comments:
Post a Comment