அறன் வலியுறுத்தல்
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31
சிறப்பையும் கொடுக்கும், செல்வத்தையும் கொடுக்குமாதலால், அறத்தைவிட மக்களுக்கு வேறு சிறப்பு ஒன்றுமில்லை.
அறந்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. 32
ஒருவர்க்கு அறத்தைவிடச் சிறந்ததும் இல்லை. அவ்வறத்தை மறத்தலைக் காட்டிலும் கேடு தருவது வேறொன்றுமில்லை.
ஒல்லும் வகையான் அறிவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல். 33
அறச்செயலை இடைவிடாது இயன்ற மட்டிலும் செய்யத்தக்க வழிகளிலெல்லாம் செய்க.
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. 34
மனத்திலே குற்றமில்லாதவனாகுக. அவ்வளவே அறம் என்பது. மற்றவையயல்லாம் பிறர் அறிவதற்காகச் செய்யும் ஆடம்பரத் தன்மைகளேயாகும்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். 35
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் நடப்பதே அறமாகும்.
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36
பின்பு செய்வோம் என்றிராமல் வாழ்க்கைத் தொடக்கத்தி லிருந்தே அறத்தைச் செய்க. அவ்வறம் இறக்கும்போதும் அழியாத் துணையாகும்.
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37
பல்லக்கைச் சுமப்பானிடத்தும், அதில் ஏறிச் செல்வானிடத்தும் இது அறநெறி என வேண்டாம். மக்களில் ஒருவரை ஒருவர் சுமக்கும் முறை அறமாகாது. இது மக்கட் பண்பாட்டுக்குத் தகாத முறை யாகும். செல்வத்திலும்,
தன்மையிலும் இவ்வளவு ஏற்றத்தாழ்வு அறமாகாது என்பதாம்.
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல். 38
ஒருவன் எப்போதும் நன்மையே செய்யின், அது அவன் வாழ் நாளில் தீமைவரும் வழியை அடைக்கும் கல்லாகும்.
அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல. 39
நல்லொழுக்கத்தால்
வருவதே இன்பமாகும். அறமல்லாத பிற எல்லாம் துன்பந்தருவனவாம்.
அவற்றால் புகழும் இல்லை.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. 40
ஒருவனுக்குச் செய்யத்தக்கது அறமே. செய்யத் தகாதது பழியே.
No comments:
Post a Comment