அறிவுடைமை
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண். 421
அறிவே அழிவு வராமல் காவல் செய்யும் கருவியாகும். பகைவர்க் கும் உட்புகுந்து அழிக்க முடியாத அரணுமாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. 422
மனம் சென்ற விடத்தில் அதைச் செல்லவிடாது, தீமையை விட்டு நீக்கி நன்மையின்பால் செலுத்துவது அறிவாகும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 423
யாதொரு பொருளை யார் யார் சொல்லக் கேட்பினும், அப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
எண்பெருள் ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. 424
தான் சொல்வன அரிய பொருளுடையனவாயினும் எளிய பொருளுடையனவாகக் கேட்போர் மனங் கொள்ளும்படி சொல்லி, பிறர் பேசும் பேச்சின் நுண்ணிய பொருள்களைக் காண்பதே அறிவாகும்.
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. 425
உயர்ந்தோரை நட்பாக்குவது அறிவுடைமை. அந் நட்பினிடம் விரிதலும் குவிதலும் இல்லாது ஒரு தன்மையனாவது அறிவுடைமை யாகும்.
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு. 426
உலகம் எவ்வாறு நடக்கிறதோ, அவ்வுலகத்துடன் அவ்வாறு நடப்பது அறிவு.
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர். 427
பின் வருவதனை முன்னதாக அறிய வல்லவரே அறிவுடையவ ராவார். அவ்வாறு அறிய மாட்டாதவர் அறிவில்லாதவர் ஆவர்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 428
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமை அறிவின்மையாகும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடையார் செயலாகும்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய். 429
பின்வருவனவற்றை முன் அறிந்து காக்கும் அறிவுடையோர்க்கு, நடுங்கும்படி வருவதோர் துன்பம் இல்லை.
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். 430
அறிவுடையோர் எல்லாம் உடையவராவர். அறிவில்லாதவர் எல்லாமுடையராயினும் ஒன்றுமில்லாதவராவர்.
No comments:
Post a Comment